“தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர என்னிடம் வந்து அழுதார்”: நாடாளுமன்றில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

🕔 December 8, 2020

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் சரத் வீரசேகர தன்னிடம் வந்து அழுதார் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமைநாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சரத் வீரசேகர சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது, தனக்கு வாகனம் மற்றும் பாதுகாப்பு வழங்கவில்லை என அப்போது ராணுவத் தளபதியாக இருந்த தன்னிடம் வந்து அழுததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அதன் பின்னர் தாமே வாகனம் ஒன்றையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகரவிற்கு, யுத்தம் பற்றி தெரியாது எனவும் அவர் துப்பாக்கிச் சூட்டு சத்தமொன்றைத்தானும் கேட்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை தாமே முடிவுக்குக் கொண்டு வந்தோம் என்று தற்போது அடிக்கடி மார்தட்டிக் கொண்டாலும், அவர் யுத்தத்தில் எவ்வித பங்களிப்பினையும் செய்யவில்லை எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

“சரத் வீரசேகர பாதுகாப்புப் பேரவை கூட்டங்களில் கூட ஒரு போதும் பங்கேற்றதில்லை அவருக்கு அந்த அனுமதியையும் தாம் வழங்கவில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 01ம் திகதி அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அறிவித்தது. இதனால் 300 படையினரை இழக்க நேரிட்டது” எனவும் இதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், யுத்த வெற்றியின் முழு கௌரவத்தையும் அரசியல் தலைமையிடம் சேர்க்க வேண்டுமென சரத் வீரசேகர கூறுவதாகவும் இது பிழையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரத் வீரசேகரவை சிவில் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளராக நியமிப்பதற்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ, தம்மிடம் நியமனம் குறித்து வினவியதாகவும், தாமே இந்த பதவிக்கு சரத் வீரசேகரவை பரிந்துரை செய்ததாகவும் ஏனேனில் அப்பொழுது அவருக்கு தொழில் இருக்கவில்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட போது, அவரது புதல்வர் பொலிஸ் சீருடையில் இருந்தார் எனவும் அவர் ஓர் பொலிஸ் மருத்துவர் எனவும் அவருக்கு சீருடை அணிய தகுதியில்லை எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

யாரிடம் இந்த சீருடையை கடன் வாங்கினாரோ தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்