கொரோனா எனும் கொடிய நோய் ஒழிந்ததாக, மக்கள் கனவு காணத் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நம்பிக்கை தெரிவிப்பு

🕔 December 6, 2020

“கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், அந்த கொடிய தொற்று நோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்,” என, உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர், ரெட்ரொஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், இணைய வீடியோ தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்ற போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கொரோனா, மனித நேயத்தின் மிக உயரிய மாண்பையும், கோரமான முகத்தையும் ஒன்றுசேர வெளிக்காட்ட உதவியுள்ளது. இத்தகைய சூழலில், கொரோனா தடுப்பூசி மருந்துகள் நன்கு பலனளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனால், கொரோனா ஒழிந்தது என, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்.

அதேசமயம், கொரோனா தடுப்பூசி மருந்து, அனைத்து நாடுகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். அதில் ஏழை மற்றும் வளரும் நாடுகளை பணக்கார நாடுகள் வஞ்சிக்கக் கூடாது.

உலக சுகாதார நிறுவனத்தின், ‘ஆக்ட் – ஆக்சிலரேட்டர்’ திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும் சீராக விநியோகிக்கப்படும்.

இத்திட்டத்துக்கு தேவைப்படும் நிதியை பணக்கார நாடுகள் தாராளமாக வழங்க வேண்டும்.

உலகளவிலான வறுமை, பசி, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை தடுப்பு மருந்து தீர்க்காது. அவற்றுக்கு கொரோனா பிரச்னை முடிந்த பின் தீர்வு காண வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்