சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு விளக்க மறியல்: நீதிமன்றம் உத்தரவு

🕔 December 4, 2020

ண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கொவிட்-19 கடமைகளை முன்னெடுத்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய கொவிட்-19 தொற்றாளர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் கொரோனா நோயாளர்களை கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர். 

இதன்போது கொரோனா தொற்றாளர் ஒருவர், அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், ஒரு அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியும் இருந்தார்.

இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய குறித்த நபர் தொடர்பில் பொலிஸார் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.

வைரஸ் தொற்று காரணமாக குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்தமையினால் அவரை குணமடைந்த பின்னர் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டதுடன் அவரை பாதுகாப்பான முறையில் பாணந்துறை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.

இதன்போது சுகாதார அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றம் அவரை டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அதன்படி குறித்த நபரை சிறப்பு பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களுடன் வெலிகட சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments