1200 கோடி ரூபா மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது, குடும்பத்துடன் சிக்கினார்

🕔 November 7, 2020

– பாறுக் ஷிஹான் –

நிதி நிறுவனமொன்றை இலங்கையில் நடத்தி வந்த நிலையில், வைப்பாளர்களின் சுமார் 1200 கோடி ரூபாவை மோசடி செய்தார் எனும் குற்றச் சாட்டில் தலைமறைவாகி இருந்த நபரொருவர், இந்தியாவுக்கு படகொன்றில் தனது குடும்பத்துடன் தப்பிச் சென்ற நிலையில், அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிவேல்த் குளோபல் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த சிஹாப் ஷெரீப் என்பவரே இவ்வாறு தமிழக பொலிஸாரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபரின் மனைவி பாத்திமா பர்ஸானா மாக்கார் மற்றும் மகன் ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் தமது உண்மையான விவரங்களை மறைத்து ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

யாழ்பாணத்தில் இருந்து படகு ஒன்றின் மூலமாக பயணித்த இவர்கள், தமிழகத்திலுள்ள வேதாரண்யம் தாலுகா கோடிக்கரை சவுக்கு காட்டில் கரை சேர்ந்துள்ளனர்.

இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பிரிவேல்த் குளோபல் எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி கோடிக்கணக்கான ரூபாவை மோசடி செய்து தலைமறைவான மேற்படி நபருக்கு எதிராக, நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்கலாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனம், கிழக்கின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கியதுடன்  கல்முனை, மருதமுனை, சம்மாந்துறை, பொத்துவில் உள்ளிட்ட   பிரதேசங்கள் முழுவதிலும் மொத்தமாக 200 கோடி ரூபாயையும், நாடு முழுவதிலும் 1200 கோடி ரூபாய் அளவிலும் மோசடி செய்துள்ளது.

தொடர்பான செய்தி: இஸ்லாத்தைச் சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனம்; முறைப்பாடு செய்தும் பலன் இல்லை: பாதிக்கப்பட்டோர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்