இனச் சுத்திகரிப்பு (Ethnic Cleansing): வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் மீள்குடியேற்றமும்

🕔 November 5, 2015

Article - 36
(கட்டுரையாளர் எம்.எம். பாஸில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல்துறை விரிவுரையாளராவார்)

டமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்டமையை தெளிவுபடுத்தும் முயற்சியாக இச்சிறு கட்டுரை எழுதப்படுகின்றது. இவர்களை மீளக்குடியமர்த்துவதிலுள்ள சவால்கள், பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள் என்பன குறித்து இந்த கட்டுரை வலியுறுத்துகின்றது.

உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோர்

கெடுடி யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேசச் சூழலில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் உள்நாட்டு யுத்தங்கள் அதிகரித்தன. இவற்றின் பிரதானமான விளைவுகளுள் ஒன்றாக உள்ளக இடப்பெயர்வு முக்கியம் பெறுகின்றது. 1990இல் 11 நாடுகளில் 1.2 மில்லியன் இடம்பெயர்ந்தோர் காணப்பட்ட அதேவேளை, அது 2009இல் 27.1 மில்லியனாக உயர்வடைந்த காரணத்தினால் ஐக்கிய நாடுகளும் ஏனைய நிறுவனங்களும் இது குறித்து அதிக அக்கறையினை செலுத்த முன்வந்தன. இந்தப் பின்னணியில் நின்று கொண்டே இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் குறித்தும் அவர்களை மீளக் குடியமர்த்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாட வேண்டியிருக்கின்றது.

தனிநபர் அல்லது குழுக்கள் அவர்களது வீடுகளை அல்லது சொந்த இடங்களை விட்டு ஆயுத மோதலின் பாதிப்பு, பொதுமைப்படுத்தப்பட்ட வன்முறைச் சூழல், மனித உரிமை மீறல், மேலும் இயற்கை அல்லது மனித அனர்த்தம் காரணமாக நாட்டின் சர்வதேச எல்லையை தாண்டிச் செல்லாமல் உள்நாட்டின் எல்லைக்குள் இடம்பெயர்வதே உள்ளக இடப்பெயர்வாகும் (UNCHR, 1998). இந்த அடிப்படையில் 75,000 இற்கும் மேற்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் 1990 ஒக்டோபர் 30இல் LTTE இனரால் வெளியேற்றப்பட்டனர். 200 ரூபா பணத்துடன் எதிர்பாராத விதமாக அவகாசமற்ற நிலையில் கொடூரமான சோதனைகளுக்கு மத்தியில் தமது வாழ்விடங்கள், ஏனைய சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது. இச்செயன்முறை ஒரு திட்டமிடப்பட்ட இனச் சுத்திகரிப்பா இல்லையா என்பது குறித்த விவாதம் இன்றைய அரசியல் பரப்பில் சூடு பிடித்துள்ளது.

இனச் சுத்திகரிப்பு குறித்து Andrew Bell என்பவர் குறிப்பிடும்போது ‘மதம் அல்லது இனப்பாராபட்டசம், மற்றும் அரசியல், தந்திரோபாய அல்லது கருத்தியல் காரணமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து தேவையற்ற மக்கள் எனக்கருதி குறிப்பிட்ட பிரிவினர் வெளியேற்றப்படுவது இனச் சுத்தகரிப்பு எனப் புரிந்து கொள்ளப்பட முடியும்’ என்றார். Ethnic cleansing can be understood as the expulsion of an “undesirable” population from a given territory due to religious or ethnic discrimination, political, strategic or ideological considerations, or a combination of these (Andrew Bell. (1993). A Brief history of Ethnic Cleansing, Foreign Affairs. USA).

எனவே இந்த ஆய்வாளரின் வரைவிலக்கணத்தின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

யுத்தத்துக்குப் பின்னரான மீள் குடியேற்றத்திலுள்ள சவால்கள்

2009இல் LTTE இனர் வெற்றி கொள்ளப்பட்டு உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகம், அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றன ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் தாபனத்தின் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தோருக்கான வழிகாட்டல் அடிப்படைகளுக்கு ஏற்ப வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள மீளக் குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். அந்த வழிகாட்டல் அடிப்படைகளின்படி மக்களின் விருப்பின் பெயரில் சொந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அமர்த்தப்படல் வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதுடன், தொடர்ச்சியான அரச மேற்பார்வை இடம்பெறுதல் வேண்டும். அதன்பிறகு அவர்கள் சமூகத்தில் எவ்வித வேறுபாடுகளுமற்ற வகையில் இணைக்கப்படல் அவசியமாவதுடன் சுதந்திர வாழ்வும் வழங்கப்படல் வேண்டும். அடுத்து அழிவுத் தடங்களை அழித்து பரம்பரைத் தொழிலை மீள ஒருங்கிணைத்து தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். பெண்களின் பாதுகாப்பும் மாணவர்களின் கல்வியும் அடுத்த முக்கியமான அம்சங்களாகும். அரச, அரசசார்பற்ற ஊழியர்களினது பாரபட்ச செயன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கலாசாரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மன உளைச்சல் நீக்கப்பட்டு, பயமற்ற சூழல் பேணப்படல் வேண்டும். படித்த இளைஞர்களின் மேம்பாடு, தொழில் வசதி, சுகாதார வசதி, அழிந்த நிலை சூழலை சீர்படுத்தல், மதத் தலங்களை சீர்படுத்தல், மீண்டும் யுத்தம் ஏற்படும் ஒரு சூழல் ஏற்படாமல் பாதுகாத்தல் போன்றன வழிகாட்டல் தத்துவங்களாக அமைய வருகின்றன (UN Guideline Principles, 2004). இந்த அடிப்படை தத்துவங்கள் அனைத்தும் பின்பற்றப்பட்ட வகையில் வடமாகாண முஸ்லிம்கள் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்பது குறித்த எதிர்பார்ப்பு நியாயமானது.

ஆனால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களில்; 25 வீதமானவர்கள் மாத்திரமே இதுவரை சில கிராமங்களில் ஆங்காங்கே மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 75 வீதமானவர்கள் இன்னும் இடம்பெயர்ந்தவர்களாகவே வாழ்கின்றனா (Hasbullah, 2015). மீள் குடியேற்றப்பட்டவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத சூழ்நிலையிலும் வாழ்கின்றனர். அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்கள் பெரும்பாலும் உதவ முன்வராத சூழல் காணப்படுவதுடன் சர்வதேச சமூகமும் பராமுகமாக இருக்கின்றது.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக மீளக் குடியமர்த்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் ஒரு சிறந்த கொள்கை இல்லை. முஸ்லிம்களின் காணிகள் படையினரின் முகாம்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் காடுகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக 2012ம் ஆண்டின் அரச வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் முசலி தெற்குப் பிரதேசம் சூழல் அதிகார சபைக்குரிய காட்டுப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது (Hasbullah, 2015).

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தாபனத்தின் இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஹைப்ரிட் நீதிமன்றம் குறித்த தீர்மானத்தில் 2002–2009 வரைக்குமான யுத்த குற்றங்களே விசாரணைக்குட்படுத்த இருக்கின்றது. இதிலும் வடமாகாண முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்பற்றப்பட வேண்டிய உபாயங்கள்

  • இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்கிடையேயான போட்டி பேதங்களை மறந்து வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் விடயத்தில் ஒன்றிணைந்த செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
  • ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிப்பதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்குக் கொடுத்தல்.
  • அரசாங்கத்தின் பொறுப்புடைமை மிக முக்கியமானதாகும். மீள்குடியேற்றம் குறித்த அரச கொள்கைளை உருவாக்குவதற்கு வழிவகுத்தல், அதில் வடமாகாண முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளப்படல்.
  • முஸலி தெற்கு காட்டுப் பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதனை அரசாங்கத்தினால் மீளப் பெற்றுக்கொள்ளச் செய்ய முயற்சித்தல்.
  • முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் சமூக அமைப்புக்கள், சமய தலைவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவிடம் 1990இல் வடமாகாண முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் பலவந்த வெளியேற்றம் எனும் விடயம் ஹைப்ரிட் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை உள்ளடக்கிய வேண்டுகோளினை எழுத்துமூலம் சமர்ப்பித்தல். இதற்காக மனித உரிமை ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளிடமும் ஏனைய நாடுகளிடமும் இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறைகளைக் கையாளுதல்.

எனவே, வடமாகாகணத்தில் மிக நீண்ட காலமாக சமாதானமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் 1990இல் இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பி வருவதற்கும் மீளக் குடியமர்வதற்கும் உரிமையுடையவர்களாவர்;. இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது பொறுப்புடைமையினை சரியாக நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுவாகும். முஸ்லிம் தலைவர்களினதும் சிவில் சமூக அமைப்புக்களினதும் ஒற்றுமைப்பட்ட செயற்பாடு கால்நூற்றாண்டைக் கடந்த வடபுல முஸ்லிம்களின் இடப்பெயர்வு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத் தரலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்