ஹரீஸுக்கு எதிராக ஏவி விடப்பட்டுள்ள தவம்; பின்னணியில் ஹக்கீம்: இன்னொரு உட்கட்சிப் பூசல் ஆரம்பம்

🕔 October 20, 2020

– மரைக்கார் –

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில், அந்தக் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் மிக மோசமான தாக்குதகள்களை எழுத்து வடிவில் வெளியிட்டமையினை அடுத்து, தவத்துக்கு எதிராக ஹரீஸ் தரப்பினரும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸினுள் மிக மோசமான உட்பூசல் தோன்றியுள்ளது.

தற்போதைய அரசாங்கம் – அரசியல் யாப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதி வருகின்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம்; முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை கொச்சைப்படுத்தும் விதமாக, கடந்த 12ஆம் திகதி பதிவொன்றை இட்டிருந்தார்.

குறித்த பதிவில் ஹரீஸின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, அது – ஹரீஸ் குறித்து எழுதப்பட்டதுதான் என்பதை பலரும் அறிவர்.

தவம் இவ்வாறு எழுதியதை அடுத்து ஹரீஸின் தீவிர ஆதரவாளர்கள் – பேஸ்புக்கில் தவத்தை வறுத்தெடுக்கத் தொடங்கினர்.

இதன் ஒரு கட்டமாக, ஹரீஸின் ஊடக செயற்பாடுகளை நீண்ட காலமாகக் கவனித்து வருகின்ற றியாத் ஏ மஜீத் என்பவர், தவத்தை விமர்சிக்கும் வகையில் பேஸ்புக்கில் இன்று பதிவொன்றினை இட்டுள்ளார்.

அதில்; 18ஆவது திருத்தத்துக்கு மாகாண சபையில் தலைவரை மீறி பசிலுடன் டீல் பேசி கையெழுத்திட்டு விட்டு, 20ஆவது திருத்தம் பற்றி எம்.பி.மாரிடம் தவம் கேள்வி கேட்பதாக றியாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவிலும் தவத்தின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் தவத்தை குறித்தே அது எழுதப்பட்டுள்ளதை பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, மு.காங்கிரஸ் பிரதித் தலைவர் ஹரீஸுக்கும், மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் இடையில் பெரும் பனிப்போர் ஒன்று நிலவி வருகின்றமையினை கட்சியின் உள்ளும், வெளியிலும் பலரும் அறிவர்.

இந்த நிலையில் தற்போது ஹரீஸுக்கு எதிராக தவம் எழுதுவதன் பின்னணியில் மு.கா. தலைவர் ஹக்கீம் இருப்பதாகத்தான் அந்தக் கட்சிக்குள் உள்ளோர்கூட பேசிக் கொள்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸுக்குள் யாரையாவது மோசமாக விமர்சிப்பதற்கு மு.கா. தலைவர் விரும்பினால், தவத்தைக் கொண்டுதான் அதனைச் செய்து முடிப்பதாக அந்தக் கட்சிக்காரர்களே கூறுகின்றனர்.

“முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கட்சிக்குள் இருந்த போது, அவர்கள் மீது தவத்தைக் கொண்டுதான் ஹக்கீம் தனது வஞ்சகத்தைத் தீர்த்தார். முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டங்களின் போது, ஹக்கீமுக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக பேசுவதற்கும், கூக்குரலிடுவதற்குமான எடுபிடியாக தவம் இருந்து வருகின்றார்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஒருவரே கூறுகின்றார்.

இவ்வாறான பின்னணியில்தான் தற்போது ஹரீஸ் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் – சொற் தாக்குதல்களையும் தவம் நடத்தி வருகின்றார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடைய ஆசிர்வாதத்துடன்தான் தவத்தின் இந்த செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை, மு.காங்கிரஸ்காரர்களே வெளிப்படையாகக் கூறிக் கொள்கின்றனர்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் – தற்போதைய அரசாங்கத்துடன் ஹரீஸ் சேர்ந்து கொள்வாராயின், அதற்கு முன்னதாகவே, அவரை நாறடித்து விட வேண்டும் என்கிற தீர்மானத்தில்தான் – தவம் களமிறக்கி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவம் எழுதிய பேஸ்புக் பதிவு
றியாத் எழுதியுள்ள பதிவு

Comments