ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

🕔 November 4, 2015

Article - 35
கி
ழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றினை வழங்குவதாக, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தார். இதற்கிணங்க, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மூன்று நபர்கள் மேற்படி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமக்குத்தான் வழங்க வேண்டுமென்று மு.கா. தலைவரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்தனர். அவர்களில் மேற்படி நசீரும் ஒருவர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு, அதுவும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோரியவர்களில் ஒருவரான நசீருக்கு, திடீரென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எதிர்பார்த்திருந்த பிரதேசத்துக்கு, கிழக்கு மாகாண அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமையானது, அந்தப் பிரதேசத்தில் ஆங்காங்கே முணுமுணுப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தி சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் நசீர் என்ன கூறினார் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியின் அரசியல் பின்புலம் குறித்து நீங்கள் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கட்டுரையை இலகுவாகவும், சுவாரசியமாகவும் புரிந்து கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணத்தில் ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக, மு.காங்கிரஸ் சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்கியது. இதற்கிணங்க விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டு அமைச்சுப் பதவிகள் மு.கா.வுக்கு கிடைத்தன. இதில் விவசாய அமைச்சராக ஹபீஸ் நசீர் அஹமட்டும், சுகாதார அமைச்சராக எம்.ஐ.எம். மன்சூரும் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணசபை ஆட்சியில் அரைவாசிக் காலத்துக்கான முதலமைச்சர் பதவியும், தங்கள் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்பது, மு.காங்கிரசின் நிபந்தனையாக இருந்தது. இதன்படி, மேற்படி மாகாண சபையின் அரைவாசிக் காலத்தின் பின்னர், விவசாய அமைச்சராக பதவி வகித்த ஹாபீஸ் நசீர் அஹமட் முதலமைச்சராக்கப்பட்டார். மன்சூர் தொடர்ந்தும் சுகாதார அமைச்சராக இருந்தார்.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலின்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போடடியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினரானார். இதனால், கிழக்கு மாகாணசபையில் மன்சூர் வகித்த மாகாணசபை உறுப்பினர் பதவியும், சுகாதார அமைச்சுப் பதவியும் வெற்றிடமானது. இதற்கிணங்க, குறித்த வெற்றிடங்களுக்கு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மாகாணசபை உறுப்பினராக மு.காங்கிரசைச் சேர்ந்த ஐ.எல்.எம். மஹிர் நியமிக்கப்பட்டார். சுகாதார அமைச்சினை நசீர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தி, சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

‘கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி வெற்றிடமானதும், அதனைக் கைப்பற்றி தமது அணியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கும் முயற்சிகளை, ஐ.தே.கட்சினரும். ஐ.ம.சு.கூட்டமைப்பினரும் மேற்கொண்டார்கள். இதனால், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவியானது முஸ்லிம் காங்கிரசிரமிருந்து பறிபோகும் நிலைவரமொன்று உருவானது. இதனை அறிந்து கொண்ட தலைவர் ஹக்கீம், என்னை அவசரமாகத் தொடர்பு கொண்டு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினை உடனடியாகப் பொறுப்பேற்குமாறு கூறினார். இதனால்தான், குறித்த அமைச்சினை நான் பாரமெடுத்தேன்’ என்று, அந்த ஊடகவிலாளர் சந்திப்பில் நசீர் விளக்கமளித்தார்.

இது ஒருபுறமிருக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினை நசீர் பொறுப்பேற்றுக் கொண்டமையினால், கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எல். தவம் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளானதொரு கிளைக் கதையும் இங்கு உள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி தனக்குத்தான் கிடைக்குமென்று, மு.கா.வின் கிழக்கு மாகாண உறுப்பினர் தவம் நினைத்துக் கொண்டார். அப்படி அவர் நினைத்தமைக்கு ஒரு காரணமுள்ளது. பொதுத் தேர்தல் காலத்தில் அக்கரைப்பற்றுக்கு வந்து பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம், ஒரு தடவை; ‘தேர்தலின் பின்னர் அக்கரைப்பற்றுக்கு ஓர் அரசியல் அதிகாரம் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார். இதனை மனதில் வைத்துக் கொண்டுதான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி, தனக்குத்தான் கிடைக்குமென தவம் நினைத்தார். இதனால், அவரின் ஆதரவாளர்களும் அரசியல் பொதுக் கூட்டங்களில், ‘கிழக்கு மாகாணத்தின் எதிர்கால சுகாதார அமைச்சரே’ என்று தவத்தை விளித்தார்கள். அப்படி விளிப்பதை தவமும், வெளிப்படுத்த முடியாத ஒரு புன்னகையோடு ரசிக்கத் துவங்கினார்.

தவம் என்பவர் – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்ததோடு, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராகவும் பதவி வகித்திருந்தார். இந்தக் காலங்களில், அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மு.கா.வுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் பாரிய கொடுமைகளை தவம் புரிந்தார். மு.கா. தலைவர் அக்கரைப்பற்றுக்குச் சென்ற போதெல்லாம் அங்கு டயர்களை எரித்து, பல்வேறு வன்முறைகளைப் புரிந்த கூட்டத்துக்கு தவம்தான் தலைமை வழங்கியிருந்தார்.

இவ்வாறாதொரு நிலையில், அப்போதைய அமைச்சர் அதாஉல்லாவுடன் தவம் முரண்பட்டுக் கொண்ட நிலையில் மு.காங்கிரசோடு இணைந்து கொண்டார். அதாஉல்லாவை விட்டுப் பிரிந்ததும், அமைச்சர் றிசாத் பதியுத்தீனோடு இணைவதற்கான முயற்சிகளைத்தான் ஆரம்பத்தில் தவம் மேற்கொண்டார். இதற்காக, அமைச்சர் றிசாத்தின் கட்சிப் பிரமுகர்களோடு பல்வேறு தடவை, தவம் பேசியிருந்தார். ஆயினும், தனது அரசியலை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அரசியல் தளம் மு.காங்கிரஸ்தான் என்பதை, தவம் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டார்.

மு.காங்கிரசுடன் தவம் இணைந்த ‘ஈரம்’ காய்வதற்குள், 2012 ஆம் ஆண்டு, கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடந்தது. இதில், மு.கா. சார்பில் தவமும் போட்டியிட்டார். இதன்போது, அப்போதைய அமைச்சர் அதாஉல்லா மீதான கோபத்தினையும், வெறுப்பினையும் வெளிப்படுத்துவதற்காக, அவரை விட்டும் பிரிந்து வந்த, அவரின் ஊர்க்காரரான தவத்துக்கு, மு.கா. ஆதரவாளர்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். இதனால், அந்தத் தேர்தலில் மு.கா. சார்பாக ஆகக்கூடிய விருப்பு வாக்குகள் தவத்துக்குக் கிடைத்தது.

இந்தப் பின்னணியில் மு.கா.வுக்குள் நுழைந்த தவம், இப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவி தனக்குக் கிடைக்கவில்லை என்று வேதனைப்படுவதில், பெரிதாக நியாயங்கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதுதான், அம்பாறை மாவட்டத்திலுள்ள, மு.கா. ஆதரவாளர்களின் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கிறது.

சரி, நாம் இப்போது மீண்டும் அட்டாளைச்சேனைப் பக்கமாக வருவோம். மு.காங்கிரஸ் தலைவர், அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாகக் கூறிய நிலையில், இப்போது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினைத்தான் வழங்கியுள்ளார். அப்படியென்றால், இனி அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.காங்கிரஸ் வழங்காதா என்கிற கேள்வி, அந்தப் பிரதேச மு.கா ஆதரவாளர்களிடம் உள்ளது.

இந்தக் கேள்விக்கு, கடந்த சனிக்கிழமையன்று சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பதில் வழங்கினார். ‘அட்டாளைச்சேனை மண்ணுக்கு கொடுத்த வாக்குறுதியை தலைமை ஒருபோதும் மீறாது. நசீருக்கு வழங்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சுப் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு வாக்குறுதி வழங்கியவாறு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்’ என்றார் ஹக்கீம்.

இதன்படி, அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியினை, மீளவும் ஒரு தடவை உறுதிப்படுத்தியுள்ளார். மு.கா. தலைவர் இரண்டாவது முறையாகவும் அட்டாளைச்சேனைக்கு வழங்கிய இந்த வாக்குறுதியானது மீளவும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால், மு.கா. தலைவர் இந்த வாக்குறுதியினை எப்படி நிறைவேற்றுவார் என்கிற கருத்தாடல்களும், ஆராய்வுகளும், கேள்விகளும், கூடவே எழுந்து நிற்கவும் துவங்கியுள்ளன. அதுபற்றிய சில அனுமானங்கள் நம்மிடமும் உள்ளன.

மு.காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து 02 தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பதவிகள் கிடைத்திருக்கின்றன. அவற்றினை தற்போது மு.கா. தலைவர் தனக்கு விசுவாசமான இருவரிடம் கொடுத்து வைத்துள்ளார் என்பதெல்லாம் நாம் அறிந்த கதைகளாகும்.

மேற்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், இருவர் எனும் அடிப்படையில், நால்வர் நியமிக்கப்படலாம் என்கிற அனுமானமொன்று உள்ளது. அதாவது, இரண்டு நாடாளுமன்ற பதவிகளுக்கும் முதலில் இருவர் நியமிக்கப்படுவர். அவர்கள் அந்தப் பதவியின் அரைவாசிக் காலத்தை வகித்து விட்டு ராஜிநாமாச் செய்வார்கள். இதன் பின்னர், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் மிகுதி அரைவாசிக் காலத்துக்கு வேறு இருவர் நியமிக்கப்படுவர். இதுதான் அந்த அனுமானம்.

இதன் அடிப்படையில், முதலில் மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலிக்கும், திருகோணமலை மாவட்டத்துக்கும் மு.கா.வின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்படலாம் என்கிற பேச்சுக்கள் உள்ளன. இவர்களின் பின்னர், அடுத்த அரைவாசிக் காலத்துக்கான பிரதிநிதித்துவங்கள் அட்டாளைச்சேனை மற்றும் வன்னி ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது.

இவ்வாறானதொரு யோசனையை மனதில் வைத்துக் கொண்டுதான், ‘தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுப் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படும்’ என்று மு.கா. தலைவர் கூறியிருக்கக் கூடும்.

மேற்படி அனுமானங்கள் எழுந்தமானவையல்ல. முன்னைய நாடாளுமன்றில் திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களுக்கு மு.கா. சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், தற்போதை நாடாளுமன்றத்தில் மேற்படி இரண்டு மாவட்டங்களும் மு.கா. சார்பான நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மு.கா.வின் முக்கிய தளங்களாகும். அதிலும், திருகோணமலை மாவட்டம் என்பது அரசியல் ரீதியாக மு.கா.வுக்கு மிக முக்கியமான பிரதேசமாகும். அதுபோலவே, வன்னி மாவட்டமும் மு.கா. வின் அரசியல் எதிராளியான றிஷாட் பதியுத்தீன் மையம் கொண்டுள்ள இடம் என்பதால், மு.கா.வுக்கு தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளது. எனவே, இந்த இரண்டு மாவட்டங்களையும், வெறுமையாக விட்டு விட்டு அரசியல் செய்வதென்பது, மு.கா.வுக்கு ஆபத்தானதாகும். இந்த நிலையில், அட்டாளைச்சேனைக்கும் மு.கா. தலைவர் உறுதிமொழியொன்றினை மீளமீள வழங்கியுள்ளார். எனவே, மேற்படி பிரதேசங்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களை வழங்குவதில் நிறையவே நியாயங்களும், கட்சிக்கு லாபங்களும் உள்ளன.

ஆனால், மு.கா. செயலாளருக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தினை மு.காங்கிரஸ் வழங்குவதில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை என்பதே பெரும்பான்மை மு.கா. ஆதரவாளர்களின் நிலைப்பாடாக உள்ளது.

மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி நிந்தவூரைச் சேர்ந்தவர். அவருக்கு முஸ்லிம் காங்கிரசினூடாக ஏற்கனவே இரண்டு தடவை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட இரண்டு தடவையும், அவரின் சொந்த ஊரான நிந்தவூரில் பைசால் காசிம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதாவது, தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நிந்தவூரில் இருக்கும் நிலையில்தான், நிந்தவூரைச் சேர்ந்த ஹசனலிக்கு இரண்டு தடவையும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இம்முறையும் நிந்தவூரில் பைசால் காசிம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், போதாக்குறைக்கு பிரதியமைச்சராகவும் உள்ளார். இவ்வாறானதொரு நிலையில், செயலாளர் ஹனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுவதை, நியாய தர்மத்தின் அடிப்படையில் மு.கா. ஆதரவாளர்கள் கணிசமானோர் விரும்பவில்லை என்பதுதான் கள நிலைவரமாகும்.

ஆயினும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, வழங்க வேண்டுமென மு.கா. தலைமையை, செயலாளர் ஹசனலி நெருக்குவாரப் படுத்துவதாக அறியமுடிகிறது. தனக்கு வழங்கப்படும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை, நிந்தவூர் பிரதேசத்துக்கானது என்று பார்க்காமல், மு.கா. செயலாளருக்கான கௌரவம் என்று பார்க்குமாறும் ஹசனலி கூறுகிறார். ஆனால், ஹசனலியின் இந்த வாதம் எந்தளவு மு.கா. ஆதரவாளர்களிடம் எடுபடும் என்று தெரியவில்லை.

மு.கா. செயலாளர் தனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கும் வாதங்களை படிக்கின்ற, மு.கா.வின் சாதாரண வாக்காளர் ஒருவர்;

  • மு.கா.வின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியொன்றின் ஊடாகத்தான் கௌரவம் வழங்கப்பட வேண்டுமா?
  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவியென்பது ஒருவரை கௌரவப்படுத்துவதற்கான அடையாளமா?
  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்லாமல், மு.கா.வின் செயலாளர் ஒருவரால் தன் கடமைகளை நிறைவேற்ற முடியாதா?
  • நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்லாமல் மு.காங்கிரசின் செயலாளராக ஹசனலி பதவி வகித்த காலங்களில், கட்சிக்குள் கௌரவமற்றவராக இருந்தாரா?

என்கிற தாறுமாறான கேள்விகளை, எக்கச்சக்கமாக முன்வைத்து விவாதிக்கத் தொடங்கினால், ஹசனலி நிச்சயம் தோற்றுப் போவார்.

ஆனால், ஹசனலி தோற்றுப் போகக் கூடாது. அவர் பற்றிய உயர்தரமான மதிப்பீடுகள் அடிமட்ட ஆதரவாளர்களிடம் இன்னும் உள்ளன. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹசனலி எடுப்பாராயின் அவர் குறித்து கட்சி ஆதரவாளர்கள் போட்டுவைத்திருக்கும் மதிப்பீடுகள் நிச்சயம் சிதறிப்போகும்.

இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஹசனலிக்குக் கிடைக்குமாயின், ‘அதை ஏன் கொடுத்தீர்கள்’ என்று மு.கா. தலைவர் ஹக்கீமை நோக்கி, கட்சி ஆதரவாளர்கள் கேட்பதை விடவும், ‘ஏன் எடுத்தீர்கள்’ என்று ஹசனலியை நோக்கித்தான் அதிகமான கேள்விகள் எழும்.

சில கேள்விகளுக்கு பதில் சொல்வது அத்தனை எளிதில்லை.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (03 நொவம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்