பிரேமலால் ஜயசேகரவை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

🕔 September 7, 2020

ரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு, சிறைச்சாலைத் திணைக்களத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.

பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி, அவரின் சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரணைக்கு எடுப்பதா இல்லையா என்பதை, இன்று திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிப்பதாக அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சட்டப்படி நாடாளுமன்ற அமர்வில் பிரேமலால் ஜயசேகர கலந்து கொள்ள முடியாது என, சட்டமா அதிபர் தெரிவித்திருக்கும் நிலையிலேயே, நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவர் பலியனார்.

இந்தக் கொலையுடன் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகரவுக்கு கடந்த ஜுலை மாதம், மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் பிரேமலால் ஜயசேகர தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்பான செய்தி: சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

Comments