மத்திய மாகாண சாஹித்திய விழா கோலாகலமாக ஆரம்பம்
🕔 November 1, 2015
– க. கிஷாந்தன் –
மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா, ஹட்டன் மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது.
‘தேர்ந்த கல்வி ஞான மெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகளை மகுட வாசகமாகக் கொண்டு, மேற்படி சாகித்திய விழா நடைபெறுகிறது.
தமிழ் சாகித்ய விழா வரலாற்றில் முதன் முறையாக தமிழ் அன்னையின் உருவப்படம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேரை எருதுகள் இழுக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கேற்புடன், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது.
இந்த ஊர்வலத்தில் மத்திய மாகாண ஆளுநர் திருமதி சுராங்கனி எல்லாவெல, இந்திய உதவித் தூதுவர் ஸ்ரீமதி ராதா வெங்கட்ராமன், நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் மருதபாண்டி ரமேஷ், நுவரெலியா மாவட்ட செயலாளர் திருமதி மீகஸ்முல்ல உட்பட மாகாணசபை உறுப்பினர்கள் ,கல்லூரி அதிபர்கள் ,கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்து சிறப்பித்தனர்.
நாடகக்கலைஞர் அமரர் ஆறுமுகம் முத்தையா பெயரிலான அமர்வை ஆரம்பித்து வைப்பதற்காக அவரது குடும்ப உறவினர்களால் அவரது உருவப்படம் திரை நீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாம் நாளின் இரண்டாவது அரங்கு கல்வியியலாளர் எஸ்.நவரட்ணவின் பெயரில் இடம்பெற்றது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த சாகித்திய விழாவானது, மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் அமர்வுகள் நாளை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இதில் ஆத்மஜோதி முத்தையா மற்றும் சாரல் நாடன் ஆகியோரின் பெயரில் அரங்குகளும் மற்றும் துறைசார்ந்தோர் கௌரவிப்பு மற்றும் விருது வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.