வக்பு சபையின் அறிவுறுத்லை மீறி, அரசியலில் குதித்தது அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளனம்: வேட்பாளர் ஒருவருக்கும் ஆதரவு

🕔 July 5, 2020

– அஹமட் –

தேர்தல் அரசியலில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஈடுபடக் கூடாதென வக்பு சபை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள நிலையில், அட்டாளைச்சனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர், தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு பகிரங்கமாக ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கூட்டமொன்றை நடத்தியதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு புகார் கிடைத்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் நடத்திய மேற்படி கூட்டம் – நேற்று சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலலுக்குச் சொந்தமான கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான சட்டத்தரணி அனூன் உட்பட சம்மேளனத்தின் உறுப்பினர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.

மேற்படி கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர் நஸீர்; அட்டாளைச்சேனையில் வேறு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சாடியும் நையாண்டி செய்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை, வாக்காளர்கள் தமக்குள்ள மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றை தனக்கும் மற்றையதை தனது கட்சி சார்பில் பொத்துவில் பிரதேசத்தில் போட்டியிடும் வாஸித் என்பவருக்கும் வழங்க வேண்டும் என்று பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினரை அறிவுறுத்திய வேட்பாளர் நஸீர்; மூன்றாவது விருப்பு வாக்கை, கல்முனை அல்லது சம்மாந்துறையில் தமது கட்சி சார்பில் களமிறங்கியுள்ள ஒரு வேட்பாளருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையில் நான்கு கட்சிகள் சார்பில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நஸீருக்கு மட்டும் அட்டாளைச்சேனை பள்ளிவாசல்கள் சம்மேளத்தினர் ஆதரவளிக்கின்றமையானது நியாயமற்றது என, மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, வக்பு சபையின் அறிவுறுத்தல்களையும் மீறி அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினர், தேர்தல் அரசியலில் மிகவும் வெளிப்படையாக ஈடுபட்டமை சட்ட விரோத செயற்பாடு எனவும் மக்கள் புகார் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, வக்பு சபையின் அறிவுறுத்தலை மீறி, தேர்தல் அரசியலில் வெளிப்படையாக ஈடுபட்ட, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவற்றின் நிருவாகங்களை உடனடியாகக் கலைப்பதற்கு வக்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்