‘ஜோராக’ மறத்தல்: முஸ்லிம் கட்சிகளின் நயவஞ்சக அரசியல்

🕔 June 16, 2020

மும்மது தம்பி மரைக்கார்

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையை அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் பிரசாரமாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்துப் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

இந்த நிலையில்தான் கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்வதற்காக சிங்களவர்களை மட்டும் கொண்ட செயலணியொன்றினை ஜனாதிபதி நியமித்தார். இதையும் அரசாங்கத்துக்கு எதிரான தேர்தல் கால பிரசாரமாக முஸ்லிம் கட்சிகள் தூக்கிப் பிடித்துள்ளன.

ஆனாலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய பிரதான முஸ்லிம் கட்சிகள், அரசாங்கத்துக்கு எதிராகத் தூக்கிப் பிடித்துள்ள இந்த விடயங்கள் தொடர்பில், அந்தக் கட்சிகள் கூட்டணியமைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி – இதுவரையில் கண்டனங்கள் எவற்றினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தமையோ, அல்லது கிழக்கிலுள்ள தொல்பொருள் இடங்களை முகாமை செய்யும் செயலணிக்கு தமிழர், முஸ்லிம்களை நியமிக்கவில்லை என்பதோ, சிங்கள மக்களின் வாக்குகளை மட்டும் எதிர்பார்த்துள்ள பொதுஜன பெரமுன கட்சினருக்கு, தேர்தலில் எந்த விதத்திலும் தீமைகளை ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால், ராஜபக்ஷவினரின் பொதுஜன பெரமுன கட்சிக்கோ அல்லது அவர்களுடன் கூட்டு வைத்துள்ள ஏனைய கட்சிகளுக்கோ முஸ்லிம் மக்களின் வாக்குகள் சென்று விடக் கூடாது என்பதற்காக, மேற்படி விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள், குற்றச்சாட்டுகளாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டு தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.

தொல்பொருட்கள் உள்ளன என்று கூறி முஸ்லிம்களின் ஏராளமான காணிகளை கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாகவே அரசு அபகரித்து வருகிறது. ஆனாலும், கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியவை – பங்காளிகளாக இருந்த போதும், அவ்வாறு அபகரிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலங்கள் எதனையும் விடுவிக்க முடியவில்லை.

ஆனால், அரசு அபகரித்து வைத்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமாக பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமது முயற்சியினால் விடுவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரித்தமையானது, தற்போதைய அரசாங்கத்தின் முஸ்லிம் விரோத செயற்பாடாகவே முஸ்லிம் மக்கள் பார்க்கின்றனர். ஆனால், அதனை தமது தேர்தல் பிரசாரத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருக்கும் முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதென்பது சந்தர்ப்பவாதமாகும்.

2018ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவெறித் தாக்குதலில் பாசித் எனும் 24 வயது இளைஞர் ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்தமையினையும், அதைச் செய்தவர்களுக்கு எதிராக அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள் – எதனையும் செய்ய முடியாமல் வக்கற்று இருந்தமையினையும் சுலபத்தில் மறந்து விட முடியாது.

அந்த வன்முறைச் சம்பவத்தில் முஸ்லிம்கள் இருவர் உயிரிழந்தார்கள். இருவர் காயமடைந்தனர். கண்டி மாவட்டத்தில் 527 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. 2635 பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். தாக்குதலில் 30 வீடுகள் சேதமடைந்தன. 259 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டன. ஒரு பள்ளிவாசல் முற்றாக சேதமாக்கப்பட்டது. 16 பள்ளிவாசல்கள் பகுதியளவில் பாதிக்கப்பட்டன. 37 வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதமடைந்தன. 180 கடைகள் பகுதியளவில் சேதத்துக்குள்ளாகின. 41 வாகனங்கள் முற்றாகவும், 41 வாகனங்கள் பகுதியளவிலும் சேதமடைந்திருந்தன. (தகவல்கள்: எம்.எஸ். குவால்தீன்)   

இவை அனைத்தும், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர்களாகவும், அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்துக் கொண்டிருந்த ஆட்சியில்தான் நடந்தன என்பதையும் நினைபடுத்த வேண்டியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலின் பின்னர், அப்பாவி முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களும், இப்போது ராஜபக்ஷவினருக்கு எதிராக தேர்தலில் களமிறங்கியுள்ள முஸ்லிம் கட்சிகள் அங்கம் வகித்த அரசாங்கத்தில் இடம்பெற்றன.

முஸ்லிம் பெண்கள் தங்கள் முகத்தை மூடுவதற்கு எதிராகவும், அறபு எழுத்துக்கள் காட்சிப்படுத்தப்படுவதற்கு எதிராகவும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும் நல்லாட்சி அரசாங்கத்தில்தான். பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் குர்ஆனை வைத்திருப்பதற்கு மக்கள் அஞ்சி, அவற்றினை ஒளித்து வைத்த சம்பவங்களும் அந்த ஆட்சியில்தான் நடந்தன.

ஆனால், அவற்றுக்கெதிராக அந்த ஆட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களோ அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

ராஜபக்ஷவினரின் முஸ்லிம் விரோத செயல்களை எதிர்ப்பதனால், அல்லது அதற்கு எதிராக குரல் கொடுப்பதனால் அல்லது அந்த செயல்களை தமது தேர்தல் பிரசாங்களுக்காக பயன்படுத்துகின்றமையினால் மட்டும், ஒருவர் அல்லது ஒரு கட்சி ‘பரிசுத்த’ நிலையை அடைந்து விட முடியாது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

2019ஆம் ஆண்டு கண்டி – கொலங்கொட எனும் இடத்தில் மஸாஹிமா எனும் பெண்ணொருவர், ‘பௌத்தர்கள் மதிக்கும் தர்மச் சக்கரம் அச்சிடப்பட்டிருந்த துணியிலான ஆடையை அணிந்திருந்தார்’ எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த சம்பவத்தை அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. நல்லாட்சிக் காலத்தில்தான் இதுவும் நடந்தது.

ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த முஸ்லிம் கட்சிகள் எவையும், அந்த ஏழைப் பெண்ணின் விடுதலைக்காக எதுவும் செய்யவில்லை. சட்டத்தரணிகள் ஏ.எம்.எம். சறூக் மற்றும் அவரின் மனைவி நுஸ்ரா ஆகியோர்தான் எவ்வித கட்டணமும் பெறாமல் அந்த ஏழைப் பெண்ணுக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். நல்லாட்சி அரசாங்க காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்குத் தெரிந்த முஸ்லிம் கட்சிகளுக்கு, மஸாஹிமாவுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றவில்லை என்பதுதான் வியப்பானதாகும்.

மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் மூலதனமாகும். அதனால்தான், இவற்றினையெல்லாம் நேர்மையான ஓர் ஊடகம் எனும் வகையில் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ”யாருக்கும் எதையும் என்னால் கற்றுக் கொடுக்க முடியாது. ஆனால், அவர்களை என்னால் யோசிக்கச் செய்ய முடியும்” என்றார் சோக்ரடீஸ். இந்தப் பத்தியினூடாக அதைத்தான் நாமும் செய்ய முயற்சிக்கின்றோம்.  

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியான மத்திய வங்கிக் கொள்ளைக்கு எதிராக, அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள் ஏன் இதுவரை குரல் கொடுக்கவில்லை என்கிற கேள்வியை மீண்டும் இந்த இடத்தில் எழுப்ப வேண்டியுள்ளது. தமக்கு வேண்டியவர்கள் தப்புச் செய்யும் போது – அது குறித்துப் பேசாமல் இருப்பதும், அதே போன்றதொரு பிழையை தமது எதிராளி செய்யும் போது, அதற்கு எதிராக கூச்சலிடுவதும் அயோக்கியத்தனத்தின் உச்சமாகும். மத்திய வங்கிக் கொள்ளை தொடர்பில் இந்த அயோக்கியத்தனத்தைத்தான் நல்லாட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் கட்சிகள் இன்றுவரை பின்பற்றி வருகின்றன.

மறுபுறமாக, பிரதான முஸ்லிம் கட்சிகள் கூட்டணியமைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசாமலிருக்கும் நயவஞ்சக அரசியலைக் கடைப்பிடித்து வருகின்றமையும் முஸ்லிம் சமூகம் சார்பில் ஏமாற்றம் தருவதாக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது தேர்தல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஊடகங்களுக்கு வழங்கியுள்ள பேட்டியின் மூலம், ஐக்கிய மக்கள் சக்தியினதும், அதன் தலைவராகச் செயற்படும் சஜித் பிரேமதாஸவினதும் நயவஞ்சக அரசியல் குறித்துப் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களில் மிகப் பெருவாரியானோர் சஜித் பிரேமதாஸவுக்கே வாக்களித்திருந்தனர். ஆனாலும், முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம், சிங்கள வாக்குகளை தாம் இழந்து விடக் கூடாது என்பதில் சஜித் கவனமாகவே இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது.

சஜித் பிரேமதாஸ குறித்து ஊடகங்களிடம் பேசிய மங்கள சமரவீர; ”அவர் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க இயலாதவராக இருக்கின்றார்” என குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு உதராணமாக, கொரோனாவினால் முஸ்லிம் ஒருவர் இறந்தால் அவரை புதைப்பதா? எரிப்பதா? என்பதிலும் நிலையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இருந்தனர் என்றும், மங்கள கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கும் தமிர்களுக்கும் ஆதரவாகப் பேசுவதனால் சிங்கள மக்களின் வாக்குகள் தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று தோன்றுகின்ற சந்தர்ப்பங்களிலெல்லாம், சஜித் பிரேமதாஸ மௌனித்தே வந்துள்ளார். இதனைத்தான்; ”மொட்டுக் கட்சியினரின் நகலாக இவர்களால் இருக்க முடியுமே தவிர, அந்தக் கட்சிக்கு மாற்றாக இவர்களால் செயற்பட முடியாது” என்று, ஐக்கிய மக்கள் சக்தியினர் குறித்து மங்கள குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவையெல்லாம் கிட்டத்தட்ட ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். முஸ்லிம்கள் தம்மை ஆதரவிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம் சமூகம் மீது ராஜபக்ஷவினர் ஆத்திரத்தில் உள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் தமக்கு ஆதரவளித்த போதும், தமக்கான சிங்கள வாக்குகள் சிதறி விடலாம் என்பதற்காக, முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய இடங்களையெல்லாம், சஜித் தரப்பு மௌனமாகக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலை பிரதான முஸ்லிம் கட்சிகள் தனித்து, அல்லது முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸால் தனித்துப் போட்டியிட முடியுமென்றால், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸால் தனித்துப் போட்டியிட முடியுமென்றால், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் கூட்டணியமைத்துப் போட்டியிட முடியுமென்றால், இதனை நாடு முழுவதுமாக ஏன் செய்து காட்ட முடியாது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.

முஸ்லிம் சமூகம் மீதான அக்கறைகளை விடவும், தமக்கு இந்தத் தேர்தலில் கிடைக்கவுள்ள நாடாளுமன்ற ஆசனங்களின் தொகை குறித்தே, முஸ்லிம் கட்சிகள் அக்கறை செலுத்தியுள்ளன என்பதைத்தான், இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆக, தமது சமூகம் குறித்து சிந்திக்காத கட்சிகளின் பின்னால் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு, முஸ்லிம் வாக்காளர்கள் அள்ளுப்பட்டுச் செல்கின்றமை எவ்வளவு மடமை என்பதையும் விளங்கிக் கொள்தல் அவசியமாகும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தாம் அமைச்சர்களாக இருந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அத்தனை சம்பவங்களையும் ஜோராக ‘மறந்து’ விட்டு, ராஜபக்ஷவினருக்கு எதிராக முஸ்லிம்களை தொடர்ந்தும் சூடேற்றும் அரசியலைச் செய்வதென்பது நேர்மையான செயற்பாடாக இருக்க முடியாது.

ஆனால், தவிர்க்க முடியாமல் ராஜபக்ஷவினரை மட்டுமே விமர்சிக்கும் நேர்மையற்ற அரசியலைச் செய்ய வேண்டிய பொறியொன்றுக்குள் பிரதான முஸ்லிம் கட்சிகள் சிக்கியுள்ளன என்பதுதான் கசக்கும் உண்மையாகும்.

மறுபுறமாக, ராஜபக்ஷவினருக்கு எதிராக முஸ்லிம்களை சூடேற்றி எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைப் பெற்று, அதன் மூலம் கிடைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ராஜபக்ஷவினருக்கே ‘கொழுத்த விலைக்கு’ இந்த முஸ்லிம் கட்சிகள் விற்றுவிடாது என்பதற்கும், உத்தரவாதங்கள் இல்லை.

அரசியல் கட்சிகள் மீதான பித்து நிலை, தனி மனித பக்த வாதம் ஆகியவற்றைக் கடந்து சிந்திக்காத வரை, மேலே கூறப்பட்டுள்ள நயவஞ்சக அரசியல் செயற்பாடுகளைப் புரிந்து கொள்தல் சாத்தியமில்லை

 நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (16 ஜுன் 2010)

Comments