றிசாட் பதியுதீன் முயற்சியினால், கொரோனா இடர்காலக் கொடுப்பனவை இடம்பெயர்நதோருக்கு வழங்க நடவடிக்கை

🕔 June 14, 2020

டக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுகள் இவ்வாரம் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக, பொருளாதார நிலைமைகள் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில், அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு கொரோனா கொடுப்பனவாக 5000 ரூபா முதற்கட்டமாகவும், அதனையடுத்து இரண்டாம் கட்டமாகவும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில், புத்தளத்தில் வாழும் மக்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படாதது தொடர்பில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு என்பன உரிய அரச அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தனர்.

அத்துடன், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இருந்தபோதும், இந்த கொடுப்பனவுகள் இம்மக்களுக்கு வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பினால், இந்த விடயம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விடயத்தினை அவர் கொண்டுவந்ததுடன், இந்த கொடுப்பனவு வழங்கப்படாமையின் பின்னணி தொடர்பில் அவதானம் செலுத்தி, இம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

இலங்கையில் 68 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவினை அரசாங்கம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில், இந்த குடும்பங்களின் பட்டியிலில் இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் உள்ளீர்க்கபடாமல் இருப்பது, அரசியல் காழ்புணர்வுகளின் அடிப்பைடையிலா? என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுமையான முடக்கத்திற்குள் இருந்தபோது, இடம்பெயர்ந்த மக்களும் பெரும் சிரமத்தையே எதிர்நோக்கியிருந்தனர். இதனை கவனத்திற்கொண்டு, இம்மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென, வடக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம். மதீன், கடிதங்கள் மூலம் உரியவர்களை வலியுறுத்தி வந்த நிலையில், இந்த கொடுப்பனவானது இவ்வாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இடப்பெயர்வுக்குள்ளான நிலையில் புத்தளத்தில் வாழும், இதுவரைக்கும் இந்த நிவாரணத்தை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு, அரசாங்க அதிபருக்கு கிராம அதிகாரிகளினால் சமர்பிக்கப்பட்ட பட்டியலுக்கு அமைவாக, இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப் பிரிவு

Comments