கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

🕔 May 10, 2020

– அஹமட் –

கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர் முஜீப் இப்றாகிம் ‘பேஸ்புக்’ மற்றும் ‘ட்விட்டர்’ பக்கங்களில் பதிவுகளை எழுதியுள்ளார். அதில்;

‘கொரோனாவினால் இடம்பெற்ற ஒன்பதாவது மரணம் மோதரையினை சேர்ந்த 44 வயதுடைய முஸ்லிம் பெண்மணியுடையது என பதிவாகியது. அதற்கமைய அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது.

பிறகு அவரது பரிசோதனையில் பிழை நேர்ந்துள்ளதாக இரண்டாவது அறிக்கை வெளியானது.

இது தொடர்பில் அவரது குடும்பம் சந்தித்த அவலங்களை எழுத்தில் சொல்லிவிட முடியாது.

இந்த தவறுக்கு பொறுப்புவாய்ந்த யாரும் அந்த குடும்பத்திடம் இதுவரை வருத்தம் தெரிவித்ததாகவும் அறியவரவில்லை.

ஆனாலும் கொரோனா இறப்பாளர்களின் எண்ணிக்கை இன்னும் இலக்கம் ஒன்பதையே காட்டுகிறது.

அது ஒன்பதல்ல. அவர்களது இரண்டாவது ஒப்புதல் வாக்குமூலத்தின் படி அந்த இலக்கம் 08 ஆக மாறவேண்டும். மாற்றுவார்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் இறுதியாக கொரோனா தொற்றினால் இறந்ததாகக் கூறப்பட்ட பெண், உண்மையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என்று, மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனை நிபுணர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் உள்ளிட்ட மூவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் தவறானவை என்றும் ரவி குமுதேஷ் கூறியிருந்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியக இணையத்தளத்தின் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.45 வரையிலான தரவுப் பதிவு

Comments