வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

🕔 May 9, 2020

ட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார்.

வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

‘கொரோனாவை சீனா வென்றதற்கு வாழ்த்துகள்’ என வட கொரிய தலைவர் கிம் – சீன அதிபருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்ததாக க்ளோபல் டைம்ஸ் நாளிதழ் கூறுகிறது.

இதேவேளை வட கொரியாவில் கொரோனா தொற்று எந்த நிலையில் இருக்கிறது என சர்வதேச சமூகத்திற்கு தெரியாது.

தங்கள் நாட்டில் கொரொனாவே இல்லை என வட கொரியா தொடர்ந்து கூறி வருகிறது. தாங்கள் தொடக்கத்திலேயே கடுமையான நடவடிக்கைகள் எடுத்து கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்திவிட்டதாக அந்நாடு தெரிவிக்கிறது.

ஆனாலும் வட கொரியாவில் கொரோனாவே இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று தென் கொரியா தெரிவிக்கிறது. வட கொரியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் அண்டைய நாடான சீனாவில் கொரோனா இருக்கும் போது, எப்படி வட கொரியாவில் இல்லாமல் இருக்கும் எனவும் தென்கொரியா கேள்வி எழுப்புகிறது.

தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடாக வட கொரியா பார்க்கப்படுகிறது. அதன் சுகாதார அமைப்புகளாலும் பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள முடியாது எனக் கூறப்படுகிறது.

Comments