கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஜவாத், மு.கா. தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

🕔 October 28, 2015

Jawad - 03
– முன்ஸிப் –

கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத் என்று அறியப்படும் கே.எம்.ஏ. அப்துல் ரஸ்ஸாக், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம். ஜெமீலின் பதவி வறிதாக்கப்பட்டமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தேர்தல் ஆணையாளரால் ஜவாத் நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் உறுப்பினராகப் பதவி வகித்த ஜெமீல், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், அ.இ.ம.காங்கிரசில் இணைந்து கொண்டு, அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

மேலும், அ.இ.ம.காங்கிரசின் சார்பாக, ஐ.தே.கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளராகவும் அவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அந்தக் கட்சியிலிருந்து ஜெமீல் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் வகித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மாகாணசபை உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கே, தற்போது கே.எம். ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதலாவது கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரசின் உறுப்பினராகப் பதவி வகித்த கே.எம். ஜவாத், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு, 17 ஆயிரத்து 468 வாக்குகளைப் பெற்றிருந்தபோதும், சொற்ப வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றிபெறத் தவறியிருந்தார்.

இந்த நிலையிலேயே, தற்போது கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய சத்தியப் பிரமாண நிகழ்வில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, அமைச்சர் ஹக்கீமின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுள்ளாஹ், இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், மற்றும் யூ.எல்.எம்.என். மூபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.Jawad - 02Jawad - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்