“நிர்வாணமாகிய ஆதவன் இணையத்தளம்”: இனக் குரோத செய்தித் தலைப்புக் குறித்து, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் கடும் கண்டனம்

🕔 April 20, 2020

னக் குரோதத்தைத் தூண்டும் வகையில், ‘ஆதவன்’ இணையத்தளம் செய்தியொன்றுக்குத் தலைப்பிட்டமை தொடர்பில், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே.எம். ரசூல், தனது கண்டனங்களையும் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தும் வகையில், ‘பேஸ்புக்’ இல் பதிவு ஒன்றினை எழுதியுள்ளார்.

இஸ்லாமியர்களை வேண்டுமென்றே கொச்சைப்படுத்துவற்கு அந்தத் தலைப்பின் மூலம், ‘ஆதவன்’ இணையத்தளம் முயற்சித்துள்ளதாகவும், ரசூல் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்தப் பதிவில்;

“உங்களுக்கு ஏன் இந்த குரூர சிந்தனை. எப்படி வேண்டுமானாலும் செய்திகளை பிரசுரிக்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

பங்களாதேஷில் நடைபெற்ற சம்பவத்தை ‘கொரோனா கோரத்தை உணராமல், அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள்’ என்ற தலைப்பில் செய்தியை உங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் பதிவேற்றியதன் மூலம் நீங்கள் எதனை எதிர்ப்பார்க்கிறீர்கள்.

உங்கள் சிற்றின்பத்துக்காகவும், சுயலாபத்திற்காகவும், உங்கள் நிகழ்ச்சி நிரல்களுக்காகவும் ஏன் மதத்தைக் குறிப்பிட்டு இனவாதத்தை தூண்டுகிறீர்கள்?

ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்று மார்தட்டிக் கொள்ளும் ஊடகத்துறை – இன்று உங்களால் மீண்டும் படுகுழிக்குள் புதைக்கப்பட்டு விட்டது.

நாட்டில் எத்தனையோ ஊடக அமைப்புகள் இருந்தும், இவ்வாறான செய்திகளைக் கண்டிப்பதில்லை என்பதுடன் கண்டுகொள்வதுமில்லை.

ஆனால் ஊடக நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பணியாற்றும் ஒருவன் என்ற வகையில், என்னால் இதனை இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியவில்லை. ஆதவனின் இந்த ஈனத்தனமான செயலைக் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இனங்களிடையே அமைதியின்மை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செய்திகள் வெளியிடுவதை எத்தகைய ஊடகமானாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. மறுபுறத்தில் பல்லாயிரக்கண்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இப்படியொரு கட்டத்தில் ஆதவன் இனவாதத்தை விதைத்து, மேலும் தூபம் போடுவது ஏன்? இதுவா உங்களின் ஊடக தர்மம்?

ஊடகத்துறையில் என்னோடு பணியாற்றிய நேர்மையான நெறிமுறை தவறாத பலர் இருக்கின்றீர்கள். அதுமட்டுமல்லாமல் எனக்கு நன்கு பரிச்சயமான பல ஊடக நண்பர்கள் இருக்கின்றீர்கள். ஆதவனின் நெறிமுறை தவறிய செயலைக் கண்டிப்பதற்கு விரும்பினால் தயவுசெய்து உங்கள் கண்டனங்களை வௌிப்படையாக பதிவிடுங்கள்” என, சிரேஷ்ட ஊடகவியலாளர் ரசூல் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்