‘கவிக்கோ பவள விழா’வில், மு.கா. தலைவர் ஹக்கீம் வாசித்த கவிதை

🕔 October 27, 2015

Hakeem - Kavikko - 02
‘கவிக்கோ அப்துல் ரகுமான் பவள விழா’ நிகழ்வில், மு.கா. தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஆற்றிய தொடக்கவுரையின் போது, வாசித்த கவிதை 

இடம்: சென்னை, தேனாம்பேட்டை – காமராசர் அரங்கம்
காலம்: 26.10.2015

ருளும் அன்பும்
அளவற்றருளும்  அவனின்;
கருணை மழையில் நனைந்து ,

உருளும் உலகை
இருளும் ஒளியுமாய்
அமைத்த அவனைப் புகழ்ந்து,

பொருளும், அறிவும்
பொதிந்த குர்ஆன் கொணர்ந்த
நபியை நினைந்து,

அருள்வாய் கவிதை
நிறைவாய்  என்று
அல்லாஹ் கருணை இறைஞ்சி,

கவித்தேன் பருக
காத்திருக்கும் அவையை
விளித்தேன் – இதோ
கவிழ்த்தேன் என்
கவிதைக் குடத்தை – இன்றிங்கு என்
அகத்தேன் அனைத்தயும்
அவிழ்த்தேன்

அரசருக்கரசன் அவனாவான்
கவி
அரசருக்கரசன் இவராவார் !

ரஹுமான் அவனின்
அடியான் இவனின்
(அப்துல் ரகுமான்)
குடியானவன் நான் – கவிதை
படியாதிருக்கலாமா?

படியாது போய் இருக்கலாமா ( ஆசனத்தில் )
முடியாது!
முடியாளும் இவர் முன்னால்
கவிதை படியாது
நான் அமர முடியாது !!!

அமர்ந்தால்…….

என் பொழுது விடியாது!

எனவே – இக்
குடியானவன் மடியாலும் ஒரு கவிதை
கவி உலகின்
முடி ஆளும் மாமன்னனுக்கர்ப்பணம்.

மன்னா!
குடியானவன் நான் கேட்கிறேன்,
இவ் அரங்கில்
உங்கள் கவிதையை
குடியாதவன் யார்?

மேடையில் இருப்போர் எல்லோரும் மேதைகள்தான்,
ஆனாலும்
இன்று இவ்வரங்கில் அமர்ந்துள்லோர் எல்லோரும்
உங்கள் கவிதைப் போதை தலைகேறிய பேதைகள்தான்!

மன்னா!
குடியானவன் நான் கேட்கிறேன்,
இவ் அரங்கில்
உங்கள் கவிதையை
குடியாதவன் யார்?

சொல்லுங்கள்!
உங்களுள் – இவரின் கவித்தேன்
குடியாதவன் யார்?

இவர்
மதுரை மஹியின்
உருதுக்  கவிதையின்
உலக மொழி பெயர்ப்பு!

ஸெய்னத்  பேகத்தின்
கருவில் வளர்ந்த
ஸெய்தூன் மரம்.

செய்யத் அஹமதின்
விந்து விழுந்து
வந்து எழுந்த சிந்து ஸம் ஸம்!
வைகைக் கரை தந்த
கவிதைப்
பொய்கை இது!

ஒருபோதும்
பொய் கை ஒழுகாத (அல்லது எழுதாத)
பொய்கை இது !

இவர் அந்த –
தென்கரை தந்த  தேன் சுறை!

வைகை மணலில் அன்று
வை – கை என்று
அட்சர சாஸ்திரம் ஆரம்பித்ததாலோ என்னமோ
வைகை வெள்ளமாய்
கரை உடைத்து பாய்கிறது கவிதை!

வற்றாத வைகக் கரையில்
ஒரு மொட்டாக வளர்ந்தவர் அல்லவா,
எனவே எப்போதும்
வற்றாத கவிதை
ஊற்றாக இருக்கிறார்.
வாணியம்பாடி வானத்தில்
சிறகுவிரித்தது  இந்த
புல் புல்!

புல் புல் தான் ஆனாலும்  –
அனியாயக்கார்களுக்கு
இவர் அபாபீல்!

அதனால்தானே –

உமறுப்புலவர் விருது பெற்றவராய்,
பொதிகை விருதால் போர்த்தப்பட்டவராய்,
தமிழன்னை விருது எனும் தகமை அலங்க்கரித்தவராய்,
அச்சர விருதுக்கு அழகு சேர்த்த கலை மாமணியாய்,
கவியரசர் பாரிவிழா விருதை
குன்றக்குடி கையால் வென்று உயர்ந்தவராய்,
சாஹித்ய எகடமி விருதை
வென்ற ஒரே தமிழ் சரித்திரமாய்,
பாரதிதாசன் விருது, சிற்பி விருது என
பல விருதை வென்றிருந்தும்
ராணா இலக்கிய விருது தானாய் இவரை வந்தடைந்திருந்தும்,
“வெற்றி பல கண்டு – நான்
விருதுபெற வரும்போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல் ரகுமானைத் தருக என்பேன் ” – என்று
கலைஞர் நாவாலும் –
தமிழ் நா ஆளும், வாழும் – அம்
மாமனிதர் கையாலும்
கலைஞர் விருதை வென்ற தமிழ் பொக்கிசமாய்,
சிங்களத்தீவினுக்கோர் பாலமமைத்து – அங்கும்
இந்துக் கடல் முத்தின்
தங்கக் கிரீடமென
கம்பர் விருதை வென்ற கம்ப காவலராய்
விளங்குகிறார்.

வில்லால் அல்லாது
சொல்லால் மல்லாடும்
கவிராத்திரி களத்திற்கு
தளபதியாய்
அல்லாஹ்வின் பெயர்தாங்கும் – இந்த
முல்லாவே இருந்துள்ளார்…
இவர் ஒரு கட்டளைக் கலிப்பா தான்
ஆனால்
வாணியம்பாடியிலோ இவர்
கட்டளை இடும் கலீபா!

“ரகு – மான் இல்லாமல்
ராமாயணம் இல்லை,
ரகுமான் இல்லாமல்
கம்பன் அரங்கில்லை” என்று
வாலி வாயால் வாழ்த்தப்பட்டவர்.

ஆழி அளவு ஆழமானது
வாலி அவர் வார்த்தை.
வாழி – இவர் நீடூழி!

இவர் –
“பொய் மான் பின்னால்
போனவன் அல்ல – நான்
ஈமான் பின்னால் ஏகும்
ரகுமான் ” என்றவர்
அதனால்,
எம் இதயத்தை வென்றவர்.

இந்த “முத்தமிழின் முகவரி “ யால்
“சுட்டுவிரல் “ தொட்டெழுதும் பருவத்திலேயே
இவரின் ” பால் வீதியில் “
“விதையாய் விழுந்தவர்கள்” நாங்கள்.

இவரை “ஆலாபனை” செய்தே
“பித்த” னாய் போனவர்கள் பலர்.

இவர் எங்களைப்போன்ற
“நேயர் விருப்பம்” கருதி
“மின்மினிகளால்  ஒரு கடிதம்” எழுதியவர்.

“அவளுக்கு நிலா என்று பெயர்” சூட்டி
“கரைகளே நதியாவதில்லை” என்று கிடந்த இந்த
“முட்டை வாசிகள்”
“மரணம் முற்றுப்புள்ளி அல்ல” என்பதை
தெரிந்துகொள்ள உதவியவர் இவர்.

“சொந்தச் சிறைகள்” உடைக்கப்பட்டு
“விலங்குகள் இல்லாத கவிதை” யாக
“புதுக்கவிதையில் குறியீடு” சொல்லி
எங்களைத் தட்டிக்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் இவர்!
இவரின்  “பூப்படைந்த சபதம்”
புத்தகத்தை விரித்தால் – அங்கு
“முத்தங்கள் ஓய்வதில்லை”.

” சிலந்தியின் வீடு “ கூட உடையக்கூடாது என்று
“தொலைபேசிக் கண்ணீர்” சிந்தி
“ரகசியப் பூ” வழங்கும்
“நெருப்பை அணைக்கும் நெருப்பு” இவர்.

“கடவுளின் முகவரி” யோடு
“சோதி மிகு நவ கவிதை” சுமந்து
“இல்லையிலும் இருக்கிறான்” அவன்
“நிலவிலிருந்து வந்தவன்”
“தட்டாதே திறந்திருக்கிறது” என்று
“தேவகானம்” ஏந்திவந்த
“பூக்காலம்” இவருடையது.

“இது சிறகுகளின் நேரம்” என
“பறவையின் பாதையில்” 
“காக்கைச் சோறு” கொண்டு
“உறங்கும் அழகி”யை எழுப்பி
“பசி எந்தச் சாதி” எனக்கேட்டு
“கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லை”  என்று
கல்வெட்டாய்க் கவிதைசெதுக்கிய
“பாலை நிலா” இவர்.

“வருடங்கள் தவறாமல்
குழந்தைகள் தினத்தைகொண்டாடுபவர்களே,
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டுவிட்டு
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்”
என்று கேட்ட
இந்த
ஹைக்கூ வை
கஸலை
நஜுமை கொண்டாடுவோம் வாருங்கள்!

புதுமைகளை தமிழுக்குள்
புகுத்திய
பெருமகனுக்கு இறைவன் பேரருளை வேண்டுவோம்!
முத்தமிழின் முதுசத்தை,
மொழி கடந்து – உலகின்
விழி திறந்து
வாசிக்க வைத்தவரை
நேசிப்போர், அவர்தம் ஆயுளைநீடிக்க
அல்லாஹ்வை ஆசிப்போம்
வாருங்கள்…
ஆமீன் , ஆமீன்
யாரப்பில் ஆலமீன்

கவித்தேன் பருக
காத்திருந்த  அவையை
விளித்தேன் – இதோ
கவிழ்த்தேன் என்
கவிதைக் குடத்தை – இன்றிங்கு என்
அகத்தேன் அனைத்தையும்
அவிழ்த்தேன் .
முத்தமிழ் வாழ்கவென
முடித்தேன்.

அல்ஹம்துலில்லாஹ்!

தொடர்பான செய்தி: கவிக்கோ அப்துல் ரகுமான் பளவிழா; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்