நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

🕔 March 21, 2020

– வை எல் எஸ் ஹமீட் –

தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான வர்த்தமானி வெளியிடுவதன்மூலம் முழுநாட்டிலும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கப்படுகிறது.

அவ்வாறு செய்தால் நீதிமன்றில் அதனைக் கேள்விக்குட்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் யாரும் அதனை சவாலுக்குட்படுத்தும் சந்தர்ப்பம் குறைவு.

அல்லது:

ஜனாதிபதி அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தி 24(3) ஐத் திருத்தி முழுநாட்டிலும் ஒரே வர்த்தமானியால் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கலாம். அல்லது தனக்கே அந்த அதிகாரத்தை வழங்கி தேர்தலை ஒத்தி வைக்கலாம்.

மே 14 இற்கு முன் தேர்தல்

நாடாளுமன்றம் மீண்டும் கூடும் திகதியாக மே 14 பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அதற்குமுன் தேர்தல் நடத்தியாக வேண்டும். அல்லது நாடாளுமன்றம் கூடும் திகதியை ஜனாதிபதி ஒத்திப்போடலாம் ஜூன் 03 இற்கு பிந்தாத வகையில்.

அவ்வாறு ஒத்திப்போட்டால் அதற்கு ஏற்றாற்போல் தேர்தலையும் ஒத்திவைக்கலாம்.

ஜூன் 03 இற்குப் பின் தேர்தலை ஒத்திப்போடல்

இதற்கான சட்ட ஏற்பாடுகளே இல்லை. இருக்கும் ஒரேவழி Doctrine of Necessity தான். இது தொடர்பாக முன்னைய ஆக்கத்தில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அது நீதிமன்றத்தினூடாக செய்வதைக்குறிக்கிறது.

அரசியலமைப்பைத் திருத்தல்

கலைந்த நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பைத் திருத்தமுடியாது. அதேநேரம் ஜூன் 03 இற்கு பின்னர், தேர்தலை நடத்துவதை அரசமைப்புத் தடுப்பதால் doctrine of necessity இன் கீழ் நீதிமன்றை நாடுவது ஒருமுறை.

மறுபுறம் கலைந்த நாடாளுமன்றத்தைக்கூட்டி ஜூன் மூன்றுக்குப் குபிறகு தேர்தலைப் பிற்படுத்த முடியாத தடையை நீக்க doctrine of necessity இன்கீழ் கீழ் அரசியலமைப்புக்கு தற்காலிக திருத்தம் கொண்டுவர முடியுமா? என முயற்சித்துப் பார்க்கலாம். ஆனாலும் உயர்நீதிமன்றம் அதனை அனுமதிக்க வேண்டும்.

Doctrine of Necessity என்பதே சட்ட ஏற்பாடுகள் இல்லாத சமயத்தில் இக்கட்டான சூழ்நிலைகளைக் கையாள சட்டங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு செய்யும் ஏற்பாடுகள்தான்.

எனவே, ஜூன் 03 இற்கு அப்பாலும் ஒத்திவைத்தல் சாத்தியப்படலாம். ஆனாலும் தற்போதைய சட்டத்தின்கீழ் அதற்கு இடமில்லை.

தொடர்பான முன்னைய ஆக்கம்: நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

Comments