தனிமைப்பட்டுள்ள முஸ்லிம் கட்சிகள்: ஆபத்தான அரசியல்

🕔 March 3, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

நேகமாக இந்தப் பத்தியை, நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத் தேர்தலொன்றுக்கான தினத்தை அறிவிக்கும் வர்த்தமானி வெளியாகி இருக்கக்கூடும். இல்லா விட்டாலும், அடுத்து வரும் நாள்களில் அது நடக்கும்.  

‘ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் அணிதான், அடுத்து அமையும் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றும்’ என்கிற பொதுவான நம்பிக்கையொன்று இருக்கத்தக்கதாக, ‘பொதுத்தேர்தல்’ எனும் போட்டியில் களமிறங்குவதற்கு, அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.  

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், நாங்கள் வெல்வது உறுதி; மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுதான் எங்கள் இலக்கு” என்கிறது பொதுஜன பெரமுன தரப்பு. இப்படி, அவர்கள் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வரும் நிலையில், மறுபுறமாக ஐக்கிய தேசிய கட்சி, பிளவடையும் நிலையில் உள்ளது.  

ரணிலின் ‘பரோட்டா கணக்கு’  

புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கும், அதற்குத் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பதற்கும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவினர் அனுமதி அளித்திருந்த நிலையில், “கூட்டணியை கடாசி விட்டு வாருங்கள்; மீண்டும், ஐ.தே.கட்சி என்றே போட்டி போடுவோம்” என, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில், சஜித் தரப்பிடம் கூறியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.  

சஜித் தலைமையிலான புதிய கூட்டணி, என்ன சின்னத்தில் போட்டியிடுவது என்கிற விவாதங்கள், ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பங்காளிக் கட்சிகள் மத்தியிலும் இடம்பெற்று வந்ததொரு காலகட்டத்தில், “எல்லாவற்றையும் அழித்து விட்டு, முதலில் இருந்து ஆரம்பிப்போம்” என்கிற ‘சூரியின் பரோட்டா கணக்கு’ மாதிரி, நிலைமையைத் தலைகீழாக மாற்றி விட்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.  

ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும், இதே மாதிரியான இழுபறிகள் சஜித் அணியினருக்கும் ரணில் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டமையால்தான், ‘சஜித் படுதோல்லி அடைந்தார்’ என்கிற கருத்துகளும் உள்ளன.   

அதன்படி பார்த்தால், சஜித் அணியினரை மீண்டும் ஒரு ‘படுதோல்வி’க்குள் தள்ளி விடுவதற்கான முயற்சிகள்தான், இப்போதும் நடக்கின்ற இழுபறியா என்கிற சந்தேகங்களும் உள்ளன.  

“ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவுடைய தீர்மானங்களைக் கூட, ரணில் இடை நிறுத்துகிறார். அதைச் செய்துவிட்டு, ரணில் – தலைவர், அகிலவிராஜ் – செயலாளர், ரவி கருணாநாயக்க – பிரதித் தலைவர், நவீன் திஸாநாயக்க – தேசிய அமைப்பாளர் என்ற அடிப்படைகளில் நாம் போட்டியிட வேண்டும் என்கிறார். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் இந்தத் திட்டம், ஆளும் அரசாங்கத்தை மகிழ்ச்சிப்படுத்துகிறது; யார், எவருடன் ‘டீலில்’ இருக்கிறார்கள் எனக் காட்டுகிறது” என்கிறார், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.  

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியுடன், தமிழ் முற்போக்கு முன்னணி இணைந்து கொள்வதாக, ஏற்கெனவே மனோ கணேசன் அறிவித்துள்ள நிலையில்தான், “கூட்டணியே வேண்டாம்” என்று ரணில் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் சஜித் தலைமையிலான கூட்டணிக்குத் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.  

நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள், இவ்வாறு சஜித் அணியுடன் அவசரக் கூட்டணியொன்றை அறிவிப்பதற்கான தேவைகள், ஏன் எழுந்தன என்கிற கேள்விகளும் முக்கியமானதாகும்.   

தவிர்க்க முடியாத உறவு   

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸுக்கும் எப்போதும் நெருக்கமானதோர் உறவு இருந்து வருகிறது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பது ஹக்கீமுக்கு அரசியல் ரீதியில் லாபகரமானதாகும்.  

அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கும், கண்டி மாவட்டத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்று, மு.கா தலைவர் வெற்றி பெறுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கடந்த காலங்களில் அமைத்திருந்த கூட்டணிதான் முக்கிய காரணமாக இருந்தது.  

தமிழ் முற்போக்கு முன்னணிக்கும், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதுதான் சாதகமானதாக இருந்தது.  

மறுபுறமாக, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்குக் கூட்டணியமைக்க, ஐக்கிய தேசிய கட்சியை விட்டால் இப்போதைக்கு வேறு தெரிவுகளும் இல்லை.   

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றை ராஜபக்‌ஷ தரப்பு நிராகரித்து விட்டது. எனவே, ராஜபக்‌ஷகளுக்கு எதிரான அணியுடன் கைகோர்ப்பதைத் தவிர, மேற்படி முஸ்லிம் கட்சிகளுக்கு வேறு வழிகள் கிடையாது.  

அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி – கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவுபட்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாஸவைப் பிடித்துக் கொண்டு, தொங்கத்தான் வேண்டுமா என்கிற கேள்விகளும் உள்ளன. எனவே, முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில், தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிற கோசங்களும் உள்ளன.  

உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்றும், இதில் எவ்வித மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை எனவும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.  

அதேபோன்று, அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டும் என்று, அந்தக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், சில வாரங்களுக்கு முன்னராகவே கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில், கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு ஐக்கிய தேசிய கட்சியுடன் அல்லது சஜித் தரப்புடன், முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவதுதான், ஹக்கீமுக்குச் சாதகமாக அமையும்.  

எனவே, சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் சஜித் அணியுடன் கூட்டணியமைத்தும் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் நன்மை கருதி மட்டும் எடுக்கப்படும் இவ்வாறான தீர்மானங்களுக்கு, சஜித் தரப்பு உடன்படுமா என்பது கேள்விக்குரியதாகும்.  

ஐ.தே.கவுக்குள் தலைமைப் பதவிக்கான சண்டை உச்சமடைந்த போது, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக, ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டமையானது சாதுரியமான செயற்பாடுகளாகத் தெரியவில்லை.   

ராஜபக்‌ஷக்களுக்கு மட்டுமன்றி, ரணில் தரப்புக்கும் மேற்படி தமிழ், முஸ்லிம் கட்சிகள் இப்போது எதிராளிகளாக மாறிப்போயுள்ளன.  

தனித்து விடப்படுவார்களா, ராஜபக்‌ஷவின் பங்காளிகள்?  

மறுபுறமாக, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டிவரும் என்கிற பேச்சுகளும் உள்ளன.   

அப்படியாயின், அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், பஷீர் சேகுதாவூத் தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்டிவரும்.  

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு வைத்துள்ள முஸ்லிம் கட்சிகள், அவ்வாறு தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால், அந்தக் கட்சிகள் எவ்வாறு வெற்றிபெறும் என்கிற கேள்விகளும் உள்ளன.  

கடந்த காலங்களில், பெருந் தேசியக் கட்சிகளுடன் சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலம், பெற்றுக் கொண்ட நன்மைகளை, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் அடைந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியதாகும்.   

உதாரணமாக, கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்கள் இரண்டை, ஐ.தே. கவிடமிருந்து பெற்றுக் கொண்டது. அதேபோன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை, ஐக்கிய தேசிய கட்சியிடமிருந்து பெற்றது.  ஆனால், இம்முறை இதுவெல்லாம் சாத்தியப்படுமா என்கிற கேள்வி பலரிடமும் உள்ளது.

பௌத்த பேரினவாதக் கோசத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, பொதுஜன பெரமுன கட்சி மட்டுமன்றி, ஐ.தே.கட்சியும் அரசியல் செய்வதற்குத் தயாராகி வரும் நிலையில்; தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்குப் பெரிதளவில் நன்மைகளைப் கொடுக்கும் வகையிலான தேர்தல் கால ஒப்பந்தங்களை, அந்தக் கட்சிகளுடன் பெருந்தேசிய கட்சிகள் செய்துகொள்ளும் என நம்புவதற்கில்லை.   

வீழ்ச்சியடையுமா முஸ்லிம் உறுப்புரிமை?  

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதில் முஸ்லிம் கட்சிகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தல், பெரும் சவால்மிக்கதாகவும் அமையப் போகிறது.   

இம்முறை நாடாளுமன்றில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். அடுத்த நாடாளுமன்றத்தில், இந்த எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்படும் என அஞ்சப்படுகிறது.   

நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முஸ்லிம் உறுப்பினர்களில் கணிசமானோர், தமது சமூகத்துக்காக எதுவும் செய்யவில்லை என்கிற விமர்சனம் பரவலாக இருந்தாலும், நாடாளுமன்றில் முஸ்லிம் அங்கத்தவர்களின் எண்ணிக்கை குறைவதென்பது, முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானதாக அமையாது.  

தாம் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, மக்களுக்கு ஏற்படும் ஏமாற்றம் காரணமாக, ஒட்டுமொத்த முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மீதும் அவநம்பிக்கை கொள்ளும் நிலைக்கு, அம்மக்கள் தள்ளப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.  

மிக நீண்ட காலமாகவே, பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். அவர்கள் மீது, பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. தமக்கு வாக்களித்த மக்களுக்காகவேனும், இவ்வாறானவர்கள் நாடாளுமன்றில் பேசியதில்லை.  

ஆனாலும், இவர்கள் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்கிற ஒரேயொரு காரணத்துக்காக, மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில், இவர்களுக்கு வேட்பாளர் ஆசனங்களை, அவர்கள் சார்ந்த கட்சிகள் வழங்கி வருகின்றன. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோசங்கள் எழுந்துள்ளன.  

ஒரு கட்சி சார்பாக, நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு செய்யப்பட்டால், இனி வாழ்நாள் முழுவதும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத விதி, அநேக அரசியல் கட்சிகளுக்குள் உள்ளது.  

இதனால் இளைஞர்கள், புதியவர்கள் நாடாளுமன்றம் செல்லும் சந்தர்ப்பத்தை இழப்பதோடு, அரசியல் கட்சிகளும் ஒரு சிலரின் கைகளுக்குள் அகப்பட்டுக் கொள்ளும் அபாயங்களும் ஏற்பட்டு விடுகின்றன.  எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், இது தொடர்பாக அனைவரும் கவனம் செலுத்துதல் வேண்டும்.  

சிறுபான்மை மக்களுக்குப் பெரும் சவாலாக அமையவுள்ள அடுத்த நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், நம்பிக்கை தருகின்றவர்களாக இருத்தல் வேண்டும்.

 நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (03 மார்ச் 2020)

Comments