சாய்ந்தமருது பிரதேச சபை தொடர்பான விடயம், டிசம்பருக்கு முன்னர் ஆராயப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்; அமைச்சர் பைஸர் முஸ்தபா

🕔 October 17, 2015
Faizar musthafa - 0134
– அஸ்ரப் ஏ. சமத் –

மைச்சர் ரஊப் ஹக்கீமுடைய யோசனைக்கிணங்க சாய்ந்தமருது  பிரதேச சபையினை உருவாக்குதல் மற்றும் அமைச்சா் மனோ கணேசனின் கோரிக்கையின் பிரகாரம் நுவரெலிய மாவட்டத்தில்  பிரதேச சபைகள் உருவாக்குதல், தரம் உயா்த்துதல் மற்றும் எல்லை நிர்ணயம் மேற்கொள்தல் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அவை அமுல்படுத்தப்படுமென்று, உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசா் முஸ்தபா தெரிவித்தார்.

மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுக்களின் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும், அவற்றினை  டிசம்பர் மாதத்துக்கு முன்னர் ஆராய்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கிணங்க இவ்விடயங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.

உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளுராட்சி சபைகளுக்கான தோ்தல்கள்  திட்டமிட்ட படி மாா்ச் மாதம் நடைபெறும். 2014ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சா் அதாஉல்லா பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த கலப்புத் தோ்தல்முறையின் அடிப்படையில் – 70 வீதம் வட்டாரமும்,  30வீதம் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறையாகவே மேற்படி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்.

தெஹிவளை – கல்கிசை, கொழும்பு, மொரட்டுவை, மகரகம போன்ற  மாநகரங்களின் ஆட்சிக்காலம் இந்த வாரம் முடிவடைகின்றன. ஆயினும்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, 22 உள்ளுராட்சி சபைகளின் ஆட்சிக்காலத்தினை  டிசம்பா் 31ஆம் திகதி  வரை நீடித்துள்ளோம். அதற்கான வா்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எனது அமைச்சினால், உலக வங்கி மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் 16 திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களினூடாக, ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளினதும் பாரிய திட்டங்களுக்காக 10 மில்லியன் ரூபாவினை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்றோம்.

எல்லை நிர்ணயம் செய்யும் நடவடிக்கை 70 வீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள நிர்ணய நடவடிக்கைகள் மிக விரைவில் நிறைவடையும். உள்ளுராட்சி சபை என்பது கழிவுகளை அகற்றுதல் அல்லது வீதி விளக்குகளை பொருத்தும் வேலைகளை மட்டும் செய்வதாக இல்லாமல், பாடசாலை மற்றும் வைத்தியசாலை போன்றவற்றின்  தேவைகளை நிறைவு செய்யும் வகையில், உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்.

இந்த நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் தலைவா்கள் உட்பட, அதிகாரிகள் மேற்கொள்ளும் லஞ்சம், களவு, அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றை கவனிப்பதற்காக, 24 மணித்தியாலயம் இயங்கக் கூடிய பொதுமக்கள் முறைப்பாடு செய்யக் கூடிய வகையில் ஒரு விசேட பொலிஸ் பிரிவை  எமது அமைச்சில் நிறுவுமாறும் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.

இச் சந்திப்பில், பிரதியமைச்சர் கருணாரத்தின பரணவித்தாரண மற்றும் அமைச்சின் செயலாளா் கமல் பத்மசிறி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Faizar musthafa - 0135

Comments

புதிது பேஸ்புக் பக்கம்