கள்ளியங்காடு மயானத்திலிருந்து, சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் புதைக்கப்பட்ட உடல் பாகங்கள் தோண்டியெடுப்பு

🕔 September 2, 2019

ட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த, சியோன் தேவாய தற்கொலை குண்டுதாரியின் தலை உள்ளிட்ட உடற் பாகங்கள் இன்று திங்கட்கிழமை தோண்டியெடுக்கப்பட்டன.

குறித்த உடற்பாகங்களைத் தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக, மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடல் பாகங்கள் இன்று தோண்டியெடுக்கப்பட்டன.

என்ன நடந்தது?

ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் மீது சஹ்ரான் காசிம் தலைமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, மட்டக்களப்பிலுள்ள சியோன் தேவாலயத்திலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதலை காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய எம்.என்.எம். ஆஸாத் எனும் நபர் நடத்தியதாக, பின்னர் நடந்த விசாரணைகள் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

சியோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதேவேளை, தற்கொலைத் தாக்குதலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆஸாத் எனும் மேற்படி பயங்கரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த பயங்கரவாதியின் உடற்பாகங்களை அரச செயலவில் அடக்கம் செய்யுமாறு, கடந்த ஜுன் மாதம், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்டது.

இவ்வாறான பின்னணியில், சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற் பாகங்கள் மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

இதனை அறிந்த அந்தப் பிரதேச மக்கள், பயங்கரவாதியின் உடற் பாகங்களை உடனடியாக அங்கிருந்து தோண்டியெடுத்து அகற்றுமாறு கோரி, மறுநாள் 27ஆம் தேதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, மட்டக்களப்பு பிரதேசத்தில் போக்குவரத்துகள் முடங்கின. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக போலீஸார் கண்ணீர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

நீதிமன்ற உத்தரவு

இதனையடுத்து, கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த சியோன் தேவாலயத் தாக்குதல்தாரியின் உடற் பாகங்களை தோண்டியெடுக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 30ஆம் தேதி உத்தரவிட்டது.

குறித்த உடற் பாகங்களைத் தோண்டியெடுத்து வேறொரு பொருத்தமான இடத்தில் அடக்கம் செய்யுமாறும், அதுவரையில் அந்த உடற் பாகங்களை மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் வைக்குமாறும், இதன்போது நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

தோண்டியெடுப்பு

இதற்கு அமையவே, இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை போலீஸார் தோண்டியெடுத்தனர்.தற்போது அந்த உடற் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்