முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம், பெண்களுக்கு அநீதியாக உள்ளது: பைஸர் முஸ்தபா

🕔 August 17, 2019

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் இந்நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு மிகப்பெரிய அநீதியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவி்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ராஜகிரியவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும். மலேசியா, டுனூசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளில் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு இருக்கையில் சட்டத்தரணிகளாக இருக்கும் முஸ்லிம் பெண்கள் ஏன் எமது நாட்டில் காதி நீதிபதிகளாக வரக்கூடாது” என்றும் பைஸர் முஸ்தபா இங்கு கேள்வி எழுப்பினார்.

“முஸ்லிம் பெண்களின் திருமண வயது 16 தொடக்கம் 18 வயதெல்லையாக இருக்க வேண்டும்” என தெரிவித்த பைஸர் முஸ்தபா, இரண்டாவது திருமணம் முடிப்பதாக இருந்தால் தனது சொத்துக்கள் வருமானங்களில் அரைவாசிப் பங்கை அவர் தனது முதல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“இலங்கையில் ஏனைய சமூகங்களினது விவாகரத்து சட்டம், மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவது போன்று, முஸ்லிம் காதி நீதிமன்றங்களும் அதே தரத்திற்கு உயர்த்தப்படல் வேண்டும்”.

இதேவேளை முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் தற்போது தடைசெய்யப்பட்டாலும், இது நிரந்தரமாக தடை செய்யப்படக் கூடாது. இது முஸ்லிம்களின் உரிமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்