கல்முனை ஆதார வைத்தியசாலையில், நோயாளர் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்: பிரச்சினைகளை எதிர்கொள்ளவதாக மக்கள் புகார்
– அஹமட் –
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்கான நேரம் மாற்றப்பட்டமை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரங்கள் பொதுவானவையாகும்.
ஆனால், ஈஸ்டர் தாக்குதலை அடுத்து – பாதுகாப்பு காரணத்துக்காக எனத் தெரிவித்து, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகம், நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது.
குறிப்பாக மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை நோயாளர்களைப் பார்வையிடுவதற்காக இருந்த வந்த நேரத்தை, 4.00 மணி தொடக்கம் 5.00 மணி என, வைத்தியசாலை நிருவாகத்தினர் மாற்றியுள்ளனர்.
இதன் காரணமாக, அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி புரிவோர், தமது கடமையை முடித்து விட்டு வந்து, நோயாளர்களைப் பார்வையிட முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, நோயாளர்களைப் பார்வையிடுவதற்குகு அரச வைத்தியசாலைகளில் பின்பற்றப்படும் பொதுவான நேரத்தை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிருவாகமும் பின்பற்ற வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.