உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி
– அஹமட் –
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார்.
கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர் இந்த வாக்குறுதியை பொறுப்புணர்வுடன் வழங்குவதாகத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இந்த உண்ணா விரதப் போராட்டத்தை நாம் மதிக்கின்றோம். இது ஒரு அஹிம்சைப் போராட்டமாகும்.
30 வருட காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பதில் ஏதும் வழங்காமல், அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளை அடுத்தே, இங்கு உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போராட்டம் நீதியானது அல்ல எனத் தெரிவித்து, முஸ்லிம் மக்கள் இதற்கு எதிராக சத்தியாக்கிரகம் இருந்து வருகின்றார்கள்.
இவை அனைத்துக்கும் அரசியல்வாதிகளே பொறுப்புக் கூற வேண்டும்.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக மனிதர்களிடையே சந்தேகப் பார்வைகள் ஏற்பட்டுள்ளன. சமூக ஒற்றுமை சிதைந்து போயுள்ளன.
ஒரே நாட்டில் வாழ்கின்ற பிரஜைகளுக்கு வெவ்வேறு சலுகைகள் இருக்க முடியாது. வீதியில் ஒரு பக்கம் சொர்கமாகவும் மறுபக்கம் நரகமாகவும் இருக்க முடியாது.
இந்தப் பிரச்சினையினை சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல வேண்டாம். அப்படிக் கொண்டு சென்றால் தமிழ் – முஸ்லிம் கலவரமாக மாறிவிடும். ஆனால், அரசியல்வாதிகள் அதனைத்தான் விரும்புகின்றார்கள்.
அரசியல்வாதிகள் தமது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக சில விடயங்களை உருவாக்குகின்றார்கள். அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தமது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துகின்றனர்.
எங்களுக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் எவையுமில்லை. தேசிய நிகழ்ச்சி நிரல் மட்டுமே எங்களிடம் உள்ளது. ஒரு நாடு – ஒரு சட்டத்துக்கு மாத்திரமே நாம் பணிகிறோம்.
தேசிய கீதத்தில் சொல்லப்படுவது, நாம் ஒரே நாட்டின் பிள்ளைகள் என்றுதான்.
எனவே சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு இனத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு சடடத்தை வழங்குவதற்கு இடமளிக்க முடியாது.
இங்கு உண்ணா விரதம் இருப்பவர்களின் உண்ணாவிரதத்தினை குறுகிய நாட்களில் வெற்றிபெறச்செய்து, உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு குறுகிய காலததில் நடவடிக் எடுப்பேன்” என்றார்.