மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

🕔 October 10, 2015
Arrested - 01ஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் – கொலை, போதைபொருள், எத்தனோல் வியாபாரம், உர மானியம் சுரண்டல், விவசாயிகளின் நஷ்டஈடு பணத்தை சுரண்டல், அரசாங்க நிதியை சுரண்டிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

மேற்படி நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் அதிகமானோர் தற்போதை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்த, ஜனக பண்டார தென்னகோன் 1999ஆம் ஆண்டு மேற்கொண்டதாகக் கூறப்படும் கொலைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவத்தினால் மனமுடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினர், அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுவதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

எனினும் பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் தான் தலையிட முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அப்படியென்றால் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்கள் 2002 – 2004 ஆண்டுகளில் மேற்கொண்டவைகள் தொடர்பிலான குற்றச் சாட்டுகளுக்கு கைது செய்யப்பட வேண்டும் என சு.கட்சி முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படுதல் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமெனவும், பொலிஸாரை ஐக்கிய தேசிய கட்சி செயற்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை கடந்த 09 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்து வைத்திருப்பது சிக்கலான விடயமெனவும், கொலை குற்றச் சாட்டுக்கு 6 மாதங்களுக்கு அதிகமாக தடுத்து வைத்திருக்க முடியாதென இவ் உறுப்பினர் குழு சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும் ஜனக பண்டாரவை கைது செய்வதற்கு முன்னர் இது குறித்து ஜனாதிபதி அறிந்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்