தர்மச் சக்கரத்தின் சரியான வடிவம், புத்த சமய அலுவலக ஆணையாளரிடமும் இல்லையாம்: நீதிமன்றில் பொலிஸார் தெரிவிப்பு

🕔 June 3, 2019

– அஹமட் –

புத்த சமய அலுவல்கள் ஆணையாளரிடமும், தர நிர்ணய சபையிடமும் கூட, சரியான தர்மச் சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிற விடயம் அம்பலமாகியுள்ளது.

மஹியங்கண நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை பொலிஸாரே கூறியுள்ளனர்.

தர்மசங்கரம் அச்சிடப்பட்ட ஆடையை அணிந்திருந்தாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்பட்டிருந்த மஸாஹிமாவின் வழக்கு, இன்றைய தினம் நீதிமன்றுக்கு வந்த போதே, இந்த விடயத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு என்ன நடந்தது என்பதை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மஸாஹிமா எனும் பெண்ணுக்காக, சமூக அக்கறையுடன் வாதாடி வரும் சட்டத்தரணி சறூக், இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

தர்மச்சக்கர வழக்கு மஹியங்கண நீதவான் ஏ.ஏ.பி. லக்‌ஷ்மன் முன்னிலையில் இன்று விளக்கத்திற்கு எடுக்கப்பட்டது.

பொலிசார்: புத்தசமய அலுவல்கள் ஆணையாளருக்கும் தரநிர்ணய சபைக்கும் அனுப்பப்பட்ட ஆடையிலுள்ள வடிவத்தை ஒப்பிட்டு நோக்குவதற்கு, தங்களிடம் சரியான தர்மச்சக்கரத்தின் வடிவம் இல்லை என்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தைச் சொல்வதால், தாம் சரியான முடிவுக்கு வரமுடியாமலிருப்பதால், ஆடையின் வடிவம் தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்கு குறிப்பிட்ட இரு தரப்பினரும் தர்மச்சக்கரம் தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரதிவாதியின் சட்டத்தரணிகள்: சட்டமா அதிபரின் வேலை வழக்கை தொடர்ந்து நடத்துவதா? இல்லையா? என முடிவெடுப்பதேயாகும். குறிப்பிட்ட ஆடையிலிருக்கும் வடிவம் தர்மச்சக்கரமா ? இல்லையா என முடிவெடுப்பது புத்தசமய அலுவல்கள் ஆணையாளரே.

பொலிசார்: எவராலும் முடிவெடுக்க முடியாத ஒரு விடயமாக இது இருப்பதால், எமது உயர்அதிகாரிகள் எல்லோரதும் முடிவின் படி B அறிக்கையை திருத்தி பாரதூரமான ICCPR சட்டத்தின் பிரிவு குற்றமாகிய இனமுறுகல் குற்றச்சாட்டை நீக்கி, சாதாரணமான தண்டணைச் சட்டக் கோவையின் பிரிவு 291 B இன் கீழ் மத நிந்தனை குற்றம் புரிந்ததாக இன்று மன்றில் அறிக்கையிடுகிறோம்.

பிரதிவாதியின் சட்டத்தரணிகள்: (கடந்த வழக்குத் தவணையின் போது, நாம் வைத்த வாதங்களை சுருக்கமாக விபரித்ததுடன்) தண்டணைச் சட்டக் கோவையின் பிரிவு 291 (B) ன் கீழான தவறானது பிணையில் விடக்கூடிய தவறு என்பதால் சந்தேக நபரை பிணையில் விடும்படி வேண்டிக்கொள்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் (வழக்கு தொடுநர்கள் மீது நாமும் உலக மக்களும் வைத்திருந்த அதிருப்திகள் அனைத்தையும் சுமந்த வார்த்தை பிரயோகங்களை ஹசலக பொலிசாரை நோக்கி காரசாரமாக அள்ளிவீசியதுடன்) ஆடையிலிருக்கும் வடிவம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 04/11/2019 திகதி ஒத்தி வைத்து மஸாஹிமாவை பிணையில்விடுதலைசெய்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்