பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமனம்; முதல் தடவையாக மைத்திரி கையளித்துள்ளார்
பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்றுள்ள நிலையிலேயே, பாதுகாப்பு பதில் அமைச்சராக ருவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் போது, பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சை, மைத்திரிபால சிறிசேன எவருக்கும் பொறுப்பாக வழங்கியிருக்கவில்லை.
இந்த நிலையில், குறித்த விடயம் நாட்டில் பாரிய பிரச்சினையை தோற்றுவித்திருந்தது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய தீர்மானத்தை எடுத்துக் கொள்வதற்காக பாதுகாப்பு சபையை கூட்டுவற்கு கூட முடியாத நிலைமை ஏற்பட்டதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தனவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வெளிநாட்டு பயணங்களின்போது, பாதுகாப்பு பதில் அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்திருந்தார்.
எனினும், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், பாதுகாப்பு அமைச்சரான மைத்திரிபால சிறிசேன, கடந்த 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படும் சந்தர்ப்பம் வரை, அவரது வெளிநாட்டு பயணங்களின் போது எவருக்கும் பாதுகாப்பு அமைச்சை வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.