இலங்கை தாக்குதல்: முஸ்லிம்களை பிளவுபடுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிக்கு பலியாகிவிட்டார்கள்: எம்.ஏ. நுஃஹ்மான் பேட்டி

🕔 April 24, 2019

லங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய, அந்த நாட்டின் மூத்த இலக்கியவாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; “இவ்வாறான தாக்குதல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை” என்றும் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக பேராசிரியர் நுஃமானிடம், பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொண்ட செவ்வியிலேயே, இந்த கருத்துக்களை பேராசிரியர் நுஃமான் தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல்களில் முஸ்லிம்கள் தொடர்புபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில்; “இஸ்லாத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்கள்தான், இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்க முடியும்” என்றும், பேராசிரியர் நுஃமான் கூறினார்.

கேள்வி: நாட்டில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்களை என்ன வகையான மனநிலையுடன் பார்க்கிறீர்கள்?

பதில்: மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இதுவொரு பைத்தியகாரத்தனமான செயல்பாடு. இப்படியொன்று நடக்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் முஸ்லிம் குழுவொன்றினால் இவ்வாறான தாக்குதல்கள் இங்கு நடக்குமென கற்பனை கூட செய்திருக்கவில்லை. இவ்வாறான தாக்குதல்களை நடத்தக்கூடிய குழுக்கள் முஸ்லிம்களுக்குள் இல்லை என்றுதான் இவ்வளவு காலமும் கூறி வந்தோம். ஆனால், எப்படியோ அது உருவாகியிருக்கிறது. ஆனால், அதுபற்றி எமக்குத் தெரியவில்லை.

முஸ்லிம்கள் மிகவும் பதட்டமாக உள்ளனர். நாங்கள் கவனமாக இந்தத் தருணத்தில் இருக்க வேண்டியுள்ளது. இனக் கலவரங்களோ, மதக் கலவரங்களோ இதனைத் தொடர்ந்து வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

கேள்வி: உள்ளுரைச் சேர்ந்தோர் மட்டும் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறான தாக்குதலை நடத்தும் ஆற்றல், உள்ளுரைச் சேர்ந்தோருக்கு எப்படி வந்தது என்கிற கேள்வி உள்ளது. பெரிய வலைப்பின்னலுடன்தான் இது நடந்துள்ளது போல் தெரிகிறது. மிகவும் நவீனமான முறையில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. அப்படியென்றால், வெளிநாட்டு சக்திகளின் உதவிகளின்றி இவர்கள் இதைச் செய்துள்ளார்களா என்பதிலும் ஆச்சரியமுள்ளது. ஆனாலும், உடனடியாக எதையும் நம்மால் கூற முடியாது.

கேள்வி: முஸ்லிம்களுக்கும் – கிறிஸ்தவர்களுக்கும் இடையில், எதுவிதமான கசப்புணர்வுகளும் இலங்கையில் இல்லாத நிலையில், அவர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நியுசிலாந்து பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்குப் பழி தீர்ப்பதாக, இலங்கைத் தாக்குதல் நடைபெற்றுள்ளது என்று, இங்கு வெளிவரும் சில செய்திகள் சொல்ல முயற்சிக்கின்றன.

ஆனால், நியுசிலாந்தில் நடந்த அந்த தாக்குதலின் பிறகு, உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு ஆதரவும் அனுதாபங்களும் கிடைத்து வந்தன. ஆனால், இலங்கையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல்கள், அந்த நிலவரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டன.

பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சில கசப்புணர்வுகள் இருந்தன. அதேபோன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலும் பிரச்சினைகள் இருந்துள்ளன.

ஆனால், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், நான் அறிந்த வரையில் இலங்கையில் பிரச்சினைகள் இருந்ததில்லை.

இவை, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலாகும். எந்த வகையிலும், இதனை நியாயப்படுத்த முடியாது.

கேள்வி: இந்தத் தாக்குதலை மேற்கொண்டோர், இதனூடாக எதனையெல்லாம் அடைந்து கொள்ள முடியுமென நம்பியிருக்கக் கூடும்?

பதில்: இதனூடாக எதையாவது அடைந்து கொள்ள முடியுமென அவர்கள் நம்பியிருந்தால், அது பைத்தியகாரத்தனமாகவே இருக்கும். இந்தத் தாக்குதல்களின் ஊடாக அதனை மேற்கொண்டோர் எதையும் அடையவில்லை. ‘திசை திருப்பல்’ ஒன்றினை ஏற்படுத்தியதைத் தவிர, அவர்கள் இதனூடாக வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை.

இங்குள்ள முஸ்லிம்களை இன்னும் இக்கட்டானதொரு நிலைமையினுள் தள்ளி விட்டதைத் தவிர, வேறு எதையும் இந்தத் தாக்குதல்கள் ஊடாக அவர்கள் செய்து விடவில்லை.

கேள்வி: இந்த சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ளுதல் வேண்டும்?

பதில்: இவ்வாறான சக்திகள் முஸ்லிம் சமூகத்துக்குள் இனியும் உருவாகாத வகையில், அறிவூட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இஸ்லாம் அமைதியான மார்க்கம், அதில் வன்முறைகளுக்கு இடமில்லை. ஒருவரை கொலை செய்வது, முழு மனித சமூகத்தையும் கொலை செய்வதற்கு ஈடானது என, அல்குரான் சொல்கிறது., ஒருவரைப் பாதுகாப்பது முழு மனிதர்களையும் பாதுகாப்பதற்குச் சமமானானதாகும்.

எனவே, வன்முறைகளுக்கும், இவ்வாறு மனிதர்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் எவ்வித இடமுமில்லை. இவை குறித்து, அறிவூட்ட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற கருத்தியல்களால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குர்ஆனிலுள்ள வசனங்களுக்கு சிலர் பைத்தியகாரத்தனமான அர்த்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் வசனங்கள் வழங்கப்பட்ட சூழல் மற்றும் வரலாற்றுப் பின்னணி போன்றவற்றை வைத்துப் பார்க்காமல், அவற்றுக்கு விளக்கமளிக்கின்ற முட்டாள்தனத்தினை சிலர் செய்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகின்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பேசினாலும், அவர்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவர்கள் என்பதே எனது நிலைப்பாடாகும். இன்னும் சொன்னால், அவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புகளே கிடையாது. ஏனென்றால், இஸ்லாத்தை இவர்கள் போன்றோர் இஸ்லாத்தின் பெயராலேயே மிகவும் கேவலப்படுத்துகின்றனர்.

மேலும், இவ்வாறானவர்களுக்குப் பின்னணியில் எவ்விதமான சக்திகளெல்லாம் உள்ளன என்றும் தெரியவில்லை.

இஸ்லாத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய நாடுகளையும் சின்னாபின்னப்படுத்துவதற்கு, மிக நீண்ட காலமாகவே மேற்கு ஏகாதிபத்தியம் முயற்சித்து வருகின்றது. அதன் விளைவுகளாகவும் இவ்வாறான தாக்குதல்களைப் பார்க்க முடியும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புக்கள் புதிதாக வந்தவை. தலிபான் இயக்கம் அமெரிக்கா கொண்டு வந்து விட்டதுதான்.

மேற்கு ஏகாதிபத்தியத்துக்கு சில குறிக்கோள்கள் உள்ளன. அவற்றினை அடைந்து கொள்வதற்காக, அவர்கள் இஸ்லாத்துக்குள் ‘வஹாபிசம்’ போன்ற பலதையும் வளர்த்து, தூண்டி விடுகின்றார்கள். முஸ்லிம்களும் அறியாமை காரணமாக இதற்குப் பலியாகின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியோரும் அவ்வாறு, அறிந்தோ அறியாமலோ பலியானவர்களாக இருக்கலாம்.

எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல்கள் முஸ்லிம்களை பயங்கரமானதொரு சூழ்நிலைக்குள் தள்ளி விட்டிருக்கிறது. இதுவரை காலமும் முஸ்லிம்களுக்கு எதிராக, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த செயற்பாடுகளையெல்லாம் ஓரளவாயினும் சமாளித்துக் கொண்டு வந்தோம். அவ்வாறானதொரு நிலையில்தான் இது நடந்திருக்கிறது.

கேள்வி: இலங்கை முஸ்லிம் சமூகத்திலுள்ள அடையாளம் மிகுந்த நபர்களுள் நீங்களும் ஒருவர் என்கிற வகையில், கிறிஸ்தவ மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நடந்த தாக்குதலை கடுமையாகக் கண்டிக்கிறோம். எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் துக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். கிறிஸ்தவர்களுடனான உறவை மீளவும் கட்டியமைக்க வேண்டும். நடந்தவை அறியாமையுடைய சிலர் செய்த காரியமாகும். எனக்கு 75 வயதாகிறது. நான் அறிந்த வகையில், கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்தவித பிரச்சினைகளும் இருந்ததில்லை. கிறிஸ்தவர்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் அதிர்ச்சியாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்