தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை நிராகரிப்பு; ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டது: பதிவாளர் தெரிவிப்பு

🕔 October 1, 2015

Satthar -  Registar - 01தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழக நிருவாகத்தினருக்கும், பல்கலைக் கழகத்தில் இன்று கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையினையடுத்து, குறித்த மாணவர்கள் தமது கவன ஈர்ப்பு போராட்டத்தினைக் கைவிட்டு கலைந்து சென்று விட்டதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால், வெளியிடங்களில் விடுதி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு, பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளை வழங்க வேண்டுமென்றும், அதுவரையில் வெளியிட விடுதிகளில் உள்ள மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பில் பல்கலைக்கழக நிருவாகம் போதியளவு கவனமெடுக்க வேண்டுமெனவும் கோரி, இன்று வியாழக்கிழமை பகல், இரண்டாமாண்டு மாணவர்கள் பதாதைகளை ஏந்தி, டயர்களை எரித்து கவன ஈரப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் வினவியபோதே, மேற்கண்ட தகவலைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை. ஆனால், மனிதாபிமான அடிப்படையில், பல்கலைக்கழகத்துக்கு வெளியில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நாம் விடுதி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம்.

குறைந்தபட்ச வசதிகளுடன் விடுதி வசதிகளை ஏற்பதாக ஆரம்பத்தில் மாணவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இப்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதி கோருகின்றனர்.

தற்போது பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள விடுதி வசதிகள் இங்குள்ள ஏனைய மாணவர்களுக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. எனவே, இங்கு மேலதிகமாக மாணவர்களை அனுமதிக்க முடியாது.

இதேவேளை, இன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பல்கலைக்கழக சொத்துக்களுக்கு நாசத்தை ஏற்படுத்தி, டயர்களை எரித்து முறையற்ற ரீதியில் நடந்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. நாகரீகமாக அவர்கள் எம்முடன் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்தில்தான் குதித்தார்கள்.

ஆயினும், இன்று மதியம் மாணவர்களை நாம் அழைத்து நிலைமைகளைத் தெளிவுபடுத்தினோம். தற்போது பல்கலைக்கழத்தின் உபவேந்தரும் நாட்டில் இல்லை. இரண்டாமாண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுவதில்லை. அதைக் கோருவதற்கும், இந்த மாணவர்களுக்கு உரிமையில்லை.

அந்தவகையில், குறித்த கவன ஈர்ப்பு நடவடிக்கையினை கைவிடுமாறு மாணவர்களை நாம் பணித்தோம். அவ்வாறில்லாவிட்டால், உத்தியோகபூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்பதை அவர்களுக்குக் கூறினோம். நிலைமையினைப் புரிந்து கொண்ட மாணவர்கள் இன்று 3.00 மணியளவில் தமது ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, கலைந்து சென்று விட்டனர்’ என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் பீடாதிபதி எம்.ஐ.எஸ். சபீனா தலைமையில், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார், நிருவாக உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப் பலர், மாணவப் பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாக அறிய முடிகிறது.

தொடர்புபட்ட செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்