பேச வைத்துப் பிடித்த துபாய் பொலிஸ்; மாட்டிக் கொண்ட மதுஷின் சகாக்கள்
– எழுதுபவர் ஆர். சிவராஜா –
மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்களை இப்போதைக்கு இலங்கைக்கு அழைத்து வர முடியாது என தெரியவருகிறது.
ஆனால் விசாரணைகளை நடத்திவரும் துபாய் பொலிஸாருக்கு, புதிய புதிய தகவல்களை வழங்கி வரும் இலங்கை விசேட அதிரடிப்படை புலனாய்வுப் பிரிவு, மதுஷ் குழுவினருககு அங்கேயே நீண்டகால சிறைத்தண்டனை பெற ஏற்பாடுகளை செய்கிறது.
அப்படி சிறைத்தண்டனை வழங்கப்பட்டு – அந்தக் காலம் முடிவடையும் போது அல்லது இடையில் நன்னடத்தை காரணமாக துபாய் நாட்டின் முக்கிய தினங்களில் மதுஷ் உட்பட்ட குழு மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டால், அப்போது இலங்ககைக்கு நாடு கடத்த கேட்கலாம்.
மதுஷ் மற்றும் சகாக்களின் இலங்கை வீடுகள் மற்றும் உறவினர்களை தேடி எஸ்.ரி.எஃப் வலைவீசி வருகிறது.
மதுஷ் தொலைபேசியில் அதிகம் அழைத்தவர்கள்
மதுஷின் தொலைபேசியில் இருந்து வந்த அழைப்புக்கள் கூடுதலாக எம்பிலிபிட்டிய – உடவளவ பகுதிகளுக்கே வந்துள்ளன. அப்படி வந்த தொலைபேசி இலக்கங்களுக்கு சொந்தமான 15 பேர் தேடப்படுவதாக தெரிகிறது.
மதுஷ் – இந்தியாவுக்கு சென்றே துபாய் சென்றுள்ளார். அப்படி இந்தியாவுக்கு அவரை அழைத்து சென்ற நீர்கொழும்பு கொச்சிக்கடை சிவாவை எஸ்.ரி.எஃப் தேட ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் சிவா என்பவர் அரசியல்வாதி ஒருவரின் கீழ் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று கருதும் பொலிஸ், அது தொடர்பிலும் தீவிர விசாரணை நடத்துகிறது.
கொச்சிக்டை சிவா
பெரோஸ் எனப்படும் பாதாள உலக முக்கிய புள்ளி யின் சகா எனக் கருதப்படும் சிவா என்பவர், பெரோஸ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் மதுஸுடன் இணைந்துள்ளார்.
அதேபோல் மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் மருதானை ஆகிய இடங்களில் கஞ்சிப்பான இம்ரானின் கொழும்பு வீடு அவரின் மனைவி – தாயாரின் வீடுகள், அவரின் இரு சகோதரிகளின் வீடுகள் மற்றும் பாஸ் பைசர் என்பவரின் வீடுகள் பொலிஸ் சோதனைக்குள்ளாகியுள்ளன.
துபாயில் கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சிப்பான இம்ரானின் சகோதரியின் மகன்மார் இருவரும் அடங்குவதால், இந்த வீடுகள் சோதனையிடப்பட்டன. முழுநாளும் தேடுதல் நடத்தப்பட்டாலும் சந்தேகத்துக்குரிய எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்த நிலையில் உறவினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கு சிறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இங்கு முக்கிய விடயம் ஒன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.
நிலை மறந்து பேசியதால், வந்த வினை
மதுஷ் மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக அவர்களுக்கு தங்களது உறவினர்களுடன் பேச அனுமதி வழங்கப்பட்டதல்லவா. அப்போது நிலைமறந்து பேசிய பலர், இலங்கையில் இருக்கும் சில சகாக்களின் பெயர்களை கூறி அவர்களை பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளனர்.
அந்த தொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படும் அல்லவா? அவை இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அதில் சொல்லப்பட்ட பெயர்களை வைத்தும் கடந்த சில நாட்களாக இலங்கையில் மதுஷின் சகாக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முதல் மனைவி
மதுஷின் முதல் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் கொட்டாவயில் வசித்து வருகிறார். அவர் ஒரு தாதி. மதுஷ் பிள்ளைகளை விட்டு போன நாள் முதல் இதுவரை, அவரிடம் இருந்து எந்த உதவியையும் பெறாமல் பிள்ளைகளை வளர்த்து வருவதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
மதுஷின் தந்தைவழி உறவினர்கள் நீர்கொழும்பில் உள்ளனர். அவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒருகாலத்தில் நீர்கொழும்பை ஆட்டிப்படைத்த மதுஷ், அங்கு தொடர்பில் இருந்தவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
அமைச்சரின் குடைச்சல்
மதுஷ் மற்றும் சகாக்கள் விசாரணை குறித்து ஆராய, விசேட அதிரடிப் படைக்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் லத்தீப் துபாய் சென்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.
அவர் துபாய் பொலிஸாரால் வரவேற்கப்படுவதாக தெரிவித்து நேற்று மாலை ஊடகங்களில் வெளிவந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட மாநாடொன்றில் உரையாற்றவென கலந்துகொள்ள சென்றிருந்த லத்தீப்புக்கு, ஒரு விருதும் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படமே அதுவாகும்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பை மனந்தளரச் செய்யும் நோக்கில், தனக்கு நெருக்கமான நண்பர்கள் ஊடாக இப்படியான வதந்திகளை பரப்பி வருவதாக அறியப்பட்டுள்ளது.
மதுஷ் மற்றும் சகாக்கள் நீண்ட காலம் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சிறுநீர் பரிசோதனை அறிக்கை நாளை ஒரு தகவலுக்காக இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்றை அனுப்ப ஏற்பாடு இருந்த போதும், இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை. துபாய் விசாரணைகள் சீரியஸாக நடப்பதே அதற்கான காரணமாகும்.
தொடர்பான செய்தி: போதைப் பொருளை மறைத்து வைத்து, மதுஷை மாட்டிய கறுப்பு ஆடு