நிந்தவூர் வீடமைப்பு திட்டம் தொடர்பில் பரப்பப்படும் ‘வட்டி’க் கதை பொய்: ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்

🕔 January 17, 2019
”மக்களுக்கு ஆக்கபூர்வமான சேவைகளை செய்ய முடியாத சில அரசியல்வாதிகள், நாம் செய்யும் சேவைகளை குழப்புவதற்கு சதி செய்கின்றனர். எமது நிந்தவூர் வீடமைப்புத் திட்டத்துக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை, வட்டியுடன் மக்கள் செலுத்த வேண்டும்  என்று வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் ஒரு ரூபாவையேனும் வட்டியுடனோ வட்டி இல்லாமலோ செலுத்தத் தேவை இல்லை. இது அரசின் இலவசத் திட்டம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்” என்று, சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்ததாக, அவரின் ஊடகப் பிரிவு செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ளது.

பைசல் காசிமின் முயற்சியால் நிந்தவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம், வட்டியுடன் தொடர்புபட்டது என்று சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“எமது ஆட்சிக் காலத்துக்குள் முடியுமானவரை மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில், இரவு பகலாக உழைத்து வருகின்றோம். அவ்வாறான சிறந்த சேவைகளில் ஒன்றுதான் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம்.

அதன் முதல் கட்டம் இப்போது நிந்தவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள் அவர்களது கைக்கூலிகளை வைத்து இதற்கு எதிராக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

இந்த வீட்டமைப்புத் திட்டத்துக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒவ்வொரு வீட்டுக்குமான ஐந்து லட்சம் ரூபா நிதியை, வட்டியுடன் மக்கள்செலுத்த வேண்டும் என்று இவர்கள் கூறி வருகின்றனர். இது பொய்.

நிர்மாணிக்கப்படவுள்ள ஒவ்வொரு வீடும் எட்டு லட்சம் ரூபா பெறுமதியானதாகும். அதில் ஐந்து லட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்கும். மிகுதி மூன்று லட்சம் ரூபாவை வீட்டின் பயனாளிகள் செலவிடுவர். மொத்தம் எட்டு லட்சம் ரூபா செலவில் வீடு நிர்மாணிக்கப்படும்.

அரசாங்கம் வழங்கும் ஐந்து லட்சம் ரூபாவை மக்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. அது இலவசமாகும். மக்கள் செலவிட வேண்டியது மூன்று லட்சம் ரூபா நிதி மாத்திரமே. அத்தோடு, மக்கள் வழங்கும் அவர்களின் சொந்தக் காணியில்தான் வீடுகள் அமைக்கப்படுகின்றன.

உண்மை இவ்வாறு இருக்க, இதைத் தாங்கிக்கொள்ள முடியாத சில அரசியல்வாதிகள் இதைக் குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஐந்து லட்சம் ரூபாவில் ஒரு சதத்தையேனும் திரும்பிச் செலுத்தத் தேவை இல்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய ஊர்களிலும் இந்தத் திட்டம் மிக விரைவில் முன்னெடுப்படவுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: வட்டிக்குள் மக்களை தள்ளி விடும் வீட்டுத் திட்டம்: அரசியலுக்காக பைசல் காசிம் நிந்தவூரில் முன்னெடுப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்