வீடமைப்புக்கு அரசாங்கம் வழங்கிய பணத்தில், லஞ்சம் பெற்ற கிராம சேவகர், தற்காலிக பதவி நீக்கம்
லஞ்சம் பெற்ற கிராம சேவகர் ஒருவர், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் நா. வேதநாயகன், இந்த பதவி நீக்க உத்தரவை வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தனது பிரிவின் கீழ் வசிக்கும் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட வீட்டமைப்புக்கான, ஒரு லட்சம் ரூபா பணத்தில், தனக்கு 25 ஆயிரம் ரூபா பணத்தினை வழங்க வேண்டும் எனக் கிராம சேவையாளர் குறித்த பெண்ணிடம் வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, குறித்த பெண் 15 ஆயிரம் ரூபாயினை வழங்கியுள்ளார்.
இருந்த போதிலும் மிகுதி 10 ஆயிரம் ரூபாய் பணத்தினை விரைந்து தருமாறு கிராம சேவகர் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கிராம சேவையாளர் தன்னிடம் பணம் கேட்டு வற்புறுத்துவது தொடர்பிலும் தான் ஏற்கனவே 15 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தொடர்பிலும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலருக்கு குறித்த பெண் முறையிட்டுள்ளார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட செயலாளர், நிர்வாக நடைமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வரையில், குறித்த கிராம சேவகரை தற்காலிகமாகப் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.