அமைச்சராக வேண்டுமெனில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென சிறிசேன கோரினார்: பொன்சேகா

🕔 December 25, 2018

மைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதன் காரணமாக, அண்மையில் ஐக்கிய தேசியக் கூட்டணியின் அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்த போதிலும், சரத் பொன்சேகாவின் பெயரை, ஜனாதிபதி அகற்றி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்குத் துறை அமைச்சினை இதன்போது சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகிறது.

அரசியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்திலும், மேற்கூறிய அமைச்சுப் பதவியினையே சரத் பொன்சேகா வகித்திருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ என்னைச் சிறையில் அடைத்த போதும், அவரிடம் மன்னிப்புக் கேட்டால் என்னை விடுவிப்பதாகக் கூறப்பட்டது.. ஆனால், அதனை நான் மறுத்து விட்டேன்.

ஒரு சாதாரண மன்னிப்புக்காக, நான் பல மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசப்பட்டேன். ஆனால், என்னுடைய நிலையிலிருந்து நான் மாறவில்லை.

அவ்வாறான நான், ஓர் அமைச்சுப் பதவிக்காக மன்னிப்புக் கோருவேன் என்று எதிர்பாரக்கிறீர்களா” என்றும் அவர் வினவினார்.

இதேவேளை, தான் மக்களைக் கொல்வதற்கு ஒருபோதும் திட்டமிடவில்லை என்றும், தான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால், அவர் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனே எனவும், இதன்போது சரத் பொன்சேகா கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொல்வதற்கு அண்மையில் சதித் திட்டமொன்று தீட்டப்பட்டதாகவும், அதில் சரத் பொன்சேகாவும் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும், தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்