தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

🕔 September 21, 2015

Nijamudeen (Subash) - 01
ரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. நேதஜி என்று அழைக்கப்பட்டும் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன.

சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி?

எம் தந்தை சிங்கப்பூரில் பிழைக்கப்போனவர். சிங்கப்பூரை அப்போது ஆண்ட பிரிட்டிஷ் அரசு பல இளைஞர்களை பலவந்தமாகத் தன் படையில் சேர்த்தது. அப்படிச் சேர்க்கப்பட்ட எங்களை மோசமாக நடத்தியது. அதிலிருந்து வெளியேறிதான் சிங்கப்பூரில் நேதாஜி படையில் இணைந்தோம். அவர் எனது ஆஜானுபாகுவான உடலைப் பார்த்து தன் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக்கிக்கொண்டார். நேதாஜி ஜெர்மன் சென்று ஹிட்லரைச் சந்தித்தபோது உட்பட பல முக்கிய சந்தர்ப்பங்களில் நான் அவருடன் இருந்திருக்கிறேன். சிங்கப்பூரின் அருகிலுள்ள ஒரு தீவின் ராஜாவான சுல்தான் என்பவரை நேதாஜி சந்திக்கச் சென்றபோது அவர் லேங்கிங் ஜாபர் காரைப் பரிசளித்தார். அந்த காரை ஓட்டத் தொடங்கிய பின் நான் நேதாஜியின் ஆஸ்தான ஓட்டுநராகவும் ஆகிவிட்டேன்.

போஸிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன?

சாதி, மத, இனப் பேதம் அவரிடம் கிடையாது. நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒரே உணர்வுதான் முக்கியம் என்று படையை வளர்த்தெடுத்தவர். வீரத்துக்குப் பேர் போன அந்த மனிதர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. இது பெரும் ஆச்சரியம்.

போஸுடனான உங்கள் கடைசி சந்திப்பை நினைவுகூர முடியுமா?

கடைசியாக நேதாஜியை நான் 1947-ல் சந்தித்தேன். மாதம் நினைவில் இல்லை. பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அவரை அனுப்பிவைத்தோம். மிகவும் குறுகலான நதியான அது இந்திய எல்லையில் கடலில் போய் கலக்கக் கூடியது. அங்கு அவரை எங்கோ அழைத்து செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருக்கும் என்று கூறப்பட்டது. அவர் படகில் ஏறிச் சென்ற அடுத்த சில நிமிஷங்களில், நாங்கள் அவரை அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது. நான் அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்.

ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் மரணம் அடையவில்லை என்கிறீர்கள். அப்படியென்றால், அப்போது போஸ் என்ன செய்துகொண்டிருந்தார்?

உண்மையைச் சொல்லட்டுமா? வானொலியில் அந்தச் செய்தி வெளியானபோது அதை நேதாஜியுடன் சேர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

அப்போது போஸும் நீங்களும் எங்கிருந்தீர்கள்?

பர்மியக் காட்டில் உள்ள முகாமில் இருந்தோம். நேதாஜி இந்தச் செய்தியைக் கேட்டு, சிரித்தார். இங்கே குறிப்பிட ஒரு முக்கிய விஷயம் உண்டு. அந்தச் செய்தியில், நேதாஜியுடன் இருந்ததாக ஹபீபுர் ரஹ்மான் என்பவர் பெயரும் வெளியானது. அவர், போஸுடன் முன்பு இருந்தவர். ஆங்கிலேயர்களின் உளவாளி என்ற சந்தேகம் அவர் மீது எங்களுக்கு உண்டு. இடையிலேயே அவர் காணாமல் போனார். அவரை விலைக்கு வாங்கி இந்த விமான விபத்தை ஆங்கிலேய அரசு ஜோடித்திருக்கலாம்.

சரி. நீங்கள் சொல்வது உண்மையென்றால், போஸ், அந்த விபத்து பொய் என்பதை வெளியே அறிவிக்காதது ஏன்?

அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகம் முழுவதும் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு நாம் இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது. அதேபோல, இடையில் அவர் வெளிப்பட்டால், அவர் ஆங்கிலேயப் படைகளிடம் ஒப்படைக்கப்படலாம் என்ற சந்தேகமும் அவருக்கு இருந்தது.

சரி, போஸுடன் நீங்கள் சொல்லும் அவருடைய படகுப் பயணத்தில் உடன் சென்றவர்கள் யார் எனக் கூற முடியுமா?

அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான சுவாமி எனும் ஒரு மதராஸி. தவிர, சுமார் 10 பேர். ஜப்பானிய மற்றும் சீக்கிய வீரர்கள். “நம் படை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டு, சாதாரண பொதுமக்களுடன் நீங்கள் ஒன்று கலந்துவிடுங்கள். நான் மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்” என்று நேதாஜி எங்களை எச்சரித்துச் சென்றார்.

பின் நடந்தது என்ன?

அவர் கூறியதைப் போலவே எங்கள் படை தொடர்பான, எங்களது தனிப்பட்ட எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டோம். என்னிடம்கூட எனது இந்திய தேசியப் படையின் அடையாள அட்டை தவிர வேறு எதுவும் கிடையாது. அப்புறம், ரங்கூன் போய், அங்கு கொஞ்ச காலம் இருந்து, கல்யாணம் முடித்து என் குடும்பத்துடன் 1965-ல் சொந்த கிராமமான இங்கு குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டேன். யாருக்கும் என்னைப் பற்றிய விவரங்கள் தெரியாது. 2005-ல் கான்பூரில் எங்கள் படையின் முன்னாள் பெண் கமாண்டர் லக்ஷ்மி செகலைச் சந்தித்தேன். அப்போதுதான் என் கதை எல்லோருக்கும் தெரியவந்தது.

இப்படி நீங்கள் தலைமறைவான பின் தவறி சிக்கியவர்களை ஆங்கிலேயர்கள் என்ன செய்தார்கள்?

எங்கள் படையினர் பிடிபட்டால் அவர்கள் இந்தியர்களாக இருந்தால், அடித்துக் கொன்று காட்டில் வீசினார்கள். ஜப்பானியர்களாக இருந்தால், சிறையில் அடைத்து துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தினார்கள். பிறகு அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் விடுவித்து ஜப்பானுக்கும் அனுப்பிவைத்தார்கள். இதற்கான காரணம் இன்றுவரை எனக்குப் புரியவில்லை. என் சந்தேகம் என்னவென்றால், நேதாஜிக்கு ஆதரவளித்த ஜப்பான் அரசுடன் ஆங்கிலேயர்களுக்கு ஏதாவது ரகசிய உடன்படிக்கை இருந்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.

சரி, பைஸாபாத்தில் வாழ்ந்த கும்நாமி பாபாதான் போஸ் என்று கூறப்படுவதை நம்புகிறீர்களா?

எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லை. அந்த பாபா இறந்த பின் அவர் நேதாஜியா என்று உறுதிசெய்வதற்காக அவரது படங்களை எனக்கும் அனுப்பினார்கள். அவர் நேதாஜி இல்லை.

போஸ் மர்மங்கள் தொடரக் காரணம் என்ன?

பதவி ஆசை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மை ஒரு நாள் நிச்சயம் வெளியாகும். மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாரணாசி வந்தபோது மோடி என்னை மேடையில் அழைத்து பொதுமக்கள் முன் ஆசி பெற்றார். இந்த விஷயத்தில் அவர் எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதேபோல, எங்கள் படையினருக்கும் எதாவது அவர் செய்ய வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்