ஐக்கிய தேசியக் கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி சுனில் பெரேரா ஆகியோர் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல் வாதிகள் என்று, 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன் ராமநாயக்க கூறியதாக, அவருக்கு எதிரான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, நீதித்துறை தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி, நாடாளுமன்ற உறுப்பினருககு எதிராக உரிய தண்டனையை வழங்குமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.
இந்த நிலையில், ஊடகங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க கருத்துத் தெரிவித்த வீடியோக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மேலோட்டமாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது தெளிவாக தெரிவதால், அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தனர்.
அதனடிப்படையில் சட்டமா அதிபரினால் முதலில் குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன், அவருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அதே குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட மற்றைய வழக்கினை அடுத்தவாரம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துகொள்ளவும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.