இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்
இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று புதன்கிழமை இரவு கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 277 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் இது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்படடுள்ளனர்.
இலங்கையில் மிக அதிகளவான ஹெரோய்ன் போதைப்பொருள் 2013ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது.
இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து 250 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை 2013ஆம் ஆண்டு இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றினர்.
அந்த ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி 2.5 பில்லியன் ரூபா என அப்போது மதிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த கடத்தல் தொடர்பில் பாகிஸ்தான் பிரஜை ஒருவரும் உள்நாட்டு இறக்குமதியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.