தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் பணம் வழங்கியமை, நீதிமன்றில் அம்பலம்
தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியதாக, அந்த நிறுவனத்தில் நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய முதித தமானகம நீதிமன்றில் தெரிவித்ததோடு, அதற்கான பற்றுச் சீட்டினையும் வெளியிட்டார்.
லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 500 மில்லியன் ரூபாவினை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று புதன்கிழமை மீண்டும் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பான மனு, நீதிபதிகள் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராகக் கடமையாற்றிய முதித தமானகமவிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் குறுக்கு விசாரணைக்கு பதிலளித்த சாட்சியாளரான முதித தமானகம, கடந்த ஜுலை மாதம் தம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனம் 95 ஆயிரம் ரூபா பணம் வழங்கியமைக்கான பற்றுச் சீட்டை வழங்கினார்.
மேலும் தொடர்ந்த குறுக்கு விசாரணையின் போது, வழக்கின் முதன்மை பிரதிவாதியான காமினி செனரத் – லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்ட காலத்தில் எவ்வித சம்பளக் கொடுப்பனவுகளையும் பெறவில்லை என்றும் சாட்சியாளரான முதித தமானகம தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 07ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.