தெ.கி.பல்கலைக்கழகம்: ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடத்தின் மின்சாரம், நீர் துண்டிப்பு; உள்நுழைந்தனர் பொலிஸார்: பேச்சுக்கு மாணவர்கள் இணக்கம்

🕔 October 24, 2018

– மப்றூக், றிசாட் ஏ. காதர் –

தென்கிழக்குப் பல்கலைகழக நிருவாக கட்டடத்தை, தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த சில சிங்கள மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில், இன்று புதன்கிழமை இரவு அங்கு சென்ற பொலிஸார், சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் – இன்று தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ள நிலையிலேயே, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவினர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புக்கான காரணம்

பகிடிவதையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கப்பட்ட தமது சகாக்களான தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்களை, மீண்டும் சேர்த்துக் கொள்ளும் படி – வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக, மேற்படி மாணவர்கள் பல்கலைக்கழககத்தின் நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து, ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், அதையும் மீறி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்து, அங்கேயே தங்கி வருகின்றனர்.

ஆக்கிரமிப்புக்கான எதிர்ப்பு

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களை, அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

ஆனாலும், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்கள் அங்கிருந்து விலகவில்லை.

இந்த நிலையிலேயே, மறு அறிவித்தல் வரையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை மூடுவதாக, இன்று புதன்கிழமை பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்தது.

இதனையடுத்து  பல்கலைக்கழகத்திலும், விடுதிகளிலும் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். ஆயினும், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியுள்ளனர்.

மின்சாரம், நீர் துண்டிப்பு

இது இவ்வாறிருக்க, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிருவாகக் கட்டடத்துக்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் ஆகியவற்றினை நிருவாகம் துண்டித்துள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, இன்று இரவு பல்கலைக்கழகத்துக்குள் பொலிஸார் நுழைந்து, நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்குள்ள மாணவர்கள் தமது பக்க நியாயங்களைக் கூறியதோடு, தங்கள் கோரிக்கைகள் என்ன என்பதையும் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கூறினர்.

உபவேந்தர் மீது குற்றச்சாட்டு

பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை, இந்தப் பிரச்சினை தொடர்பில் பேசுவதற்கு வருமாறு, பலமுறை தாம் தொலைபேசி மூலம் அழைத்த போதிலும், அவர் இதுவரையில் தம்மை வந்து சந்திக்கவில்லை என்று, மாணவர்கள் குற்றம்சாட்டினார்.

“இன்று கூட, உபவேந்தரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் ஒரு கூட்டத்தில் இருப்பதாக கூறி, எமது அழைப்பை தட்டிக் கழித்து விட்டார்” என்றும் மாணவர்கள் கூறினர்.

அதேவேளை, உபவேந்தர் நினைத்திருந்தால், இந்த பிரச்சினையினைத் தீர்த்து வைத்திருக்க முடியும் என்றும் மாணவர்கள் இதன்போது பொலிஸ் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.

கைது செய்ய முடியும்

இதன்போது, மாணவர்களிடம் பேசிய பொலிஸ் உயரதிகாரி; உங்களின் இந்த செயலால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி சீர்கெட்டுள்ளது என்று கூறினார். மேலும், சட்டத்துக்கு விரோதமாக இவ்வாறு நடந்து கொண்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பேச்சுவார்த்தைக்கு இணக்கம்

இறுதியில், அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன், தாம் பேசுவதற்குத் தயார் என்றும், அவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் கூட்டமொன்றுக்கான ஏற்பாட்டினை செய்து தருமாறும் பொலிஸ் அதிகாரியிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட பொலிஸ் உயர் அதிகாரி, அந்த ஏற்பாட்டினை செய்து தருவதாக உறுதியளித்து விட்டு, அங்கிருந்து சென்றார்.

இதன்போது, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தொங்க விட்டிருந்த பதாகையொன்றினை, பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அகற்றியதாகத் தெரிவித்து, குறித்த மாணவர்கள் – பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடிந்து கொண்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்