வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

🕔 October 4, 2018

தான் கடமையாற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக, எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார் எனும் குற்றச்சாட்டில், நேற்று பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் சாஜன்ட் தர உத்தியோகத்தரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, மத்துகம நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர்,
தான் கடமையாற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக வீதியில் இறங்கி நேற்று புதன்கிழமை எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகக் கூறி தன்னால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதலை செய்தமைக்கு எதிராகவே அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டவரிடம் சட்ட ரீதியான அனுமதிப்பத்திரம் இருந்ததால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் சார்ஜன்ட் நேற்று தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

சுமார் இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்