தேசிய காங்கிரஸில் வகித்த பதவிகளிலிருந்து அஸ்மி ராஜிநாமா; கட்சிக்கு சதி செய்வோர் பற்றி தலைவருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறிவிப்பு

🕔 September 27, 2018

– முன்ஸிப் அஹமட்-

தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் ஊடகப் பொறுப்பாளர் எனும் பொறுப்புக்களிலிருந்து, தான் விலகிக் கொள்வதாக அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயர் அஸ்மி அப்துல் கபூர் அறிவித்துள்ளார்.

தனது ‘பேஸ்புக்’ பக்கதில் நேரடியாகத் தோன்றி, இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.

தேசிய காங்கிரசின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து அண்மையில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ராஜிநாமா செய்திருந்தார்.

தேசிய காங்கிரசின் ஊடகப் பொறுப்பாளரான அஸ்மி அப்துல் கபூர்என்பவர், ‘பேஸ்புக்’ மற்றும் இணையத்தளங்களின் ஊடாக, தன்னைப் பற்றி மோசமான தகவல்களைப் பரப்புவதாகவும், வசைபாடுவதாகவும் தெரிவித்திருந்த முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை, இது பற்றி கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவிடம் பலமுறை முறையிட்டும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே, தான் ராஜிநாமா செய்ததாக, ஊடகங்களில் தோன்றி கூறியிருந்தார்.

உதுமாலெப்பை இவ்வாறு பதவிகளைச் ராஜிநாமா செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, கட்சித் தலைவர் அதாஉல்லாவைச் சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, உதுமாலெப்பைக்கு கூறுகின்றமை போல், அவருக்கு எதிராக, கட்சியைச் சார்ந்தோர் யாராவது செயற்பட்டிருந்தால், அதனைக் கண்டறிவதற்கான குழுவொன்றினை நியமிப்பதாக அதாஉல்லா அறிவித்தார்.

இந்த நிலையில், மேற்படி விசாரணைக் குழு, சுயாதீனமாக தனது பணிகளை மேற்கொள்வதற்காகவே, தனது உயர்பீட உறுப்பினர் மற்றும் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் பதவிகளை தற்காலிகமாக ராஜிநாமா செய்வதாகவும், இதுகுறித்து, கட்சித் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், அஸ்மி அப்துல் கபூர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய காங்கிரசின் சில உயர்பீட உறுப்பினர்கள் – கட்சியைப் பிளவுபடுத்துவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அவர்களுக்கெதிரான 12 ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் குறித்தும், தனது கடிதத்தில் கட்சியின் தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அஸ்மி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ள மேலதிக தகவல்களைக் கொண்ட ஒலி வடிவம்

Comments