உதுமாலெப்பையை அதாஉல்லா, மட்டம் தட்டிப் பேசியதாக குற்றச்சாட்டு

🕔 September 19, 2018

– முன்ஸிப் அஹமட் –

தேசிய காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையை, கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, மேடையில் சூசகமாக குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டிப் பேசியதாக, உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கும் அந்தக் கட்சியின் தற்போதைய பிரதித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பைக்கும் இடையில் பாரிய பிளவு ஏற்பட்டுள்ள நிலையிலேயே, இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேசிய காங்கிரசின் பேராளர் மாநாடு கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

இதன்போது, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இதுவரை காலமும் பதவி வகித்து வந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையை, பிரதித் தலைவராக நியமிப்பதாக, கட்சித் தலைவர் அதாஉல்லா அறிவித்தார்.

இதனையடுத்து, உதுமாலெப்பை இதுவரை வகித்து வந்த தேசிய அமைப்பாளர் பதவியை, டொக்டர் சியா என்பவருக்கு வழங்குவதாகவும் அதாஉல்லா தெரிவித்தார்.

அதேவேளை, “தேசிய அமைப்பாளர் பதவியை டொக்டர் சியாவுக்கு வழங்கியுள்ளமையினால், கட்சியின் அமைப்பு வேலைகள் துரிதமாகும் என நான் நினைக்கின்றேன்” என்றும், அதாஉல்லா அதன் போது கூறினார்.

அதாஉல்லாவின் இந்தப் பேச்சு, உதுமாலெப்பையின் ஆதரவாளர்களுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியின் அமைப்பு வேலைகள் இனித்தான் துரிதமாகும் என்றால், இதுவரை அமைப்பாளர் பதவியை வகித்து வந்த உதுமாலெப்பை, கட்சியின் அமைப்பு வேலைகளை துரிதமாக செய்யவில்லையா? என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும், உதுமாலெப்பையை வேண்டுமென்றே சூட்சுமமாக மட்டம் தட்டும் வகையில்தான், கட்சித் தலைவர் அதாஉல்லா இவ்வாறு பேசியதாகவும், உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் விசனப்படுகின்றனர்.

இந்த நிலையில், தேசிய காங்கிரசை விட்டும் உதுமாலெப்பை மிக விரைவில் விலகுவார் என, நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கிடைக்கிறது.

வீடியோ

தொடர்பான செய்திகள்:

01) அதாஉல்லா, உதுமாலெப்பைக்கு இடையே பிளவு: படுக்கையில் விழுகிறதா தேசிய காங்கிரஸ்?

02) அதாஉல்லா – உதுமாலெப்பை பிளவு விவகாரம்: பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை

03) அதாஉல்லாவின் தூண்டிலும், இரை ‘கவ்வாத’ உதுமாலெப்பையும்: வலுக்கிறது பிளவு

(வீடியோ மூலம்: தாருஸ்ஸபா பேஸ்புக் ரி.வி)

Comments