சம்பந்தம் இல்லாதோரெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் பெயரை நாறடித்து விட்டனர்: உபவேந்தர் நாஜிம்

🕔 September 6, 2018

– எம்.வை. அமீர்-

“தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவின்போது, சம்மந்தமே இல்லாதவர்களெல்லாம் மூக்கை நுழைத்து, பல்கலைக்கழகத்தின் நற்பெயரை நாறடித்து வைத்துள்ளனர்” என்று, அந்த  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

பந்துகள் மாற்றி விளையாடும் கலாச்சாரத்தை தவிர்த்து, ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளை சரிவர செய்வார்களானால் எந்தப்பிரச்சினைகளும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 20வது வருடாந்த ஒன்றுகூடலும் 2018/2019 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகள் தெரிவும் இன்று வியாழக்கிழமை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராசிரியர் நாஜீம் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“பல்கலைக்கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய, அங்குள்ள அதிகாரிகள் கடமைகளை  பரிந்துரைக்கும்போது, அவற்றினை தடையின்றி உபவேந்தர் அனுமதிப்பார்.

உபவேந்தர் கூறியதாக பல்கலைக்கழகத்தில் சில உண்மையற்ற கதைகள் உலவிவருகின்றன. அவ்வாறு உபவேந்தர் கூறியிருந்தால் அது எழுத்துமூலம் அறிவிக்கப்படும். முன்புபோல் அல்லாது உபவேந்தரை சந்திக்கும் விடயத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கவுள்ளன. தற்போதைக்கு என்னுடைய அலுவலகத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த அலுவலர் ஊடாக அனுமதியைப் பெற்றே என்னை சந்திக்க முடியும். சில காரணங்களுக்காகவே இவற்றினை நான் செயற்படுத்த தீர்மானித்துள்ளேன்.

ஊழியர்களின் உரிமைகள் விடயத்தில் மிகுந்த கருசனையுடன் நான் செயற்படுகிறேன். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதனை பார்த்துக்கொடிருக்க மாட்டேன்.

பல்கலைக்கழக நிதி விடயங்களில் விடப்படும் தவறுகளுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி இறுக்கமான நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக சுற்றுச்சூழலை பேணுவது விடயமாகவோ சரியான நேரத்துக்கு கடமைக்கு வந்துபோவது விடயமாகவோ என்னுடன் கலந்தாலோசிக்க எவரும் முற்படுவதில்லை.

ஊழியர் சங்கத்தின் தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். பல்கலைக்கழகத்தில் உள்ள சீர்கேடுகளை நிவர்த்திக்க ஊழியர் சங்கமும் எனக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

Comments