இன, மத ரீதியான துவேச நடவடிக்கைகளுக்கு இனி இடமில்லை; தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன்
🕔 September 8, 2015



– அஸ்ரப் ஏ. சமத் –
நாட்டில் இனங்களுக்கிடையில் குரோதத்தினையும், மத ரீதியான துவேசங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, இனிமேல் இடம் வழங்க முடியாது என்று தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இதேவேளை, மொழி ரீதியாகவுள்ள பிரசனைகள் அனைத்தினையும் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் மனோ கணேசன் – ராஜகிரியையில் உள்ள மொழிகள் மற்றும்தேசிய நல்லிணக்க அமைச்சில் – தனது கடமைகளை, இன்று செவ்வாய்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், அங்கிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மலையகம் என்று, அனைத்து பிரதேசங்களையும் இணைக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். மொழி ரீதியாக இருக்கின்ற சகல பிரசச்சினைகளையும் நாம் தீா்த்து வைக்க வேண்டும்.
இந்த நாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் நாட்டின் ஜனாதிபதியாகவும், ஜ.தே.கட்சியின் தலைவா் ரணில் விக்கிர்மசிங்க பிரதமராகவும், எதிா்கட்சித் தலைவராக இரா சம்பந்தனும், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க எதிா்கட்சியின் பிரதம கொறடாகவாகவும் பதவி வகிக்கின்றனா். அதேவேளை, ஏனைய சிறுகட்சிகளின் தலைவா்கள் அமைச்சர்களாகவும் உள்ளனர். இவ்வாறானதொரு நிலையினைத்தான் எமது மக்களும் எதிா்பாா்த்தனா்.
இவ்வாறானதொரு அரசில், நாட்டு மக்களின் அபிலாசைகள் நல்ல முறையில் முன்னெடுக்கப்படும்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் – ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க போன்றோர் கொல்லப்பட்டாா்கள். வெள்ளை வேன் கலாச்சாரம் காணப்பட்டது. இவற்றுக்கு எதிராக, கொழும்பிலுள்ள நடு வீதிகளில் இறங்கி, நான் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டேன். இதன்போது, எமக்கு உதவி வழங்கிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் விரட்டி, விரட்டித் தாக்கப்பட்டார்கள். இனி, யாரும் பயப்படத் தேவையில்லலை. மக்களுக்கு செய்யக் கூடிய சேவைகள் அனைத்தினையும் தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்” என்றார்.



Comments

