கண்களால் பேசிக் கொண்டோம்: தேர்தல் காலத்து ரகசியங்களை அம்பலப்படுத்தினார் மைத்திரி

🕔 September 6, 2015

President - UNP - 01
னாதிபதி தேர்தல் காலத்தில், ஜனவரி 05 ஆம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற இறுதி பிரசாரக் கூட்டத்துக்கு, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்களும், சாரதியும் தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஆயினும், ரணில் விக்ரமசிங்க தனது வீட்டுக்கு வந்து, அந்தக் கூட்டத்துக்குத் தன்னை அழைத்துச் சென்றதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.  அவர் இன்று இடம்பெற்ற கலந்து கொண்டு உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தவில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, மேற்படி தகவலை ஜனாதிபதி மைத்திரி வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

கைகொடுத்த ரணில்

“ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதி பிரசார தினமான ஜனவரி 05 ஆம் திகதி எம்பிலிபிட்டிய, களுத்துறை, மொரட்டுவை, உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

இதில் இறுதி பிரசார கூட்டம் மருதானையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஏனைய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களிலும் கலந்துகொண்டமையால், பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும், அதனால் மருதானை கூட்டத்திற்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறி, பாதுகாவலர்களும் சாரதியும் என்னை வீட்டினுள் தனியாக விட்டுச் சென்றனர்.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்க என்னை தொலைபேசியில் அழைத்து, “மருதானை கூட்டத்துக்கு நீங்கள் வரும் வரைதான் காத்திருக்கிறோம்” என்று கூறினார். இதன்போது, நிலைமையை நான் எடுத்துக் கூறினேன். “யாரும் தேவையில்லை, நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, சில நிமிடங்களில் எனது வீட்டுக்கு  ரவி கருணாநாயக்கவுடன் வந்து, பிரசார மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கண்களால் பேசிக் கொண்டோம்

மேலும், நவம்பர் 22ம் திகதிக்கு முன்னர், நான் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஒரு விநாடி கூட, நான் பேசியதில்லை.

அப்போது நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆசனத்தில் நான் இருந்த வேளை, தன்னை நோக்கி “நாங்கள் செல்வோம்” என்றபடி கண்களால் ரணில் சமிக்ஞை செய்தார். சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு சென்று கலந்துரையாடவே நாம் திட்டமிட்டிருந்தோம்.

ரணில் விக்ரமசிங்கவின் காரில் ஏறி நான் சென்றபோது, நாடாளுமன்றத்தின் முன்னாலுள்ள குளத்தை கடந்த வேளை சொப்பர் ரக விமானம் ஒன்று சென்றது. சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் அந்த சொப்பரில் வந்தவரால் நான் தடுக்கப்பட்டிருப்பேன்.

நான் ஜனாதிபதியாகுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க மாட்டேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்