தெ.கி.பல்கலைக்கழகம்: உபவேந்தர் நாஜிம் பதவியிழக்கிறார்; உமா குமாரசாமி தற்காலிக நியமனம்

🕔 June 15, 2018

– முன்ஸிப் அஹமட் –

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமையினாலும், புதிய உபவேந்தர் பதவிக்காக அவர் விண்ணப்பித்துள்ளமையினாலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக உபவேந்தர் ஒருவரை உயர்கல்வி அமைச்சு நியமிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

பேராசிரியை உமா குமாரசாமி என்பவர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக உபவேந்தராக நியமிக்கப்படவுள்ளார் எனவும் அறிய முடிகிறது.

தற்போது உபவேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமின் பதவிக்காலம் இம்மாதம் 21ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதேவேளை, புதிய உபவேந்தர் பதவிக்காக தற்போதைய உபவேந்தர் நாஜிம் விண்ணப்பித்தும் உள்ளார்.

எனவே, விண்ணப்பதாரியே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்து கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் தெரிவினை நடத்துவதென்பது நியாயமற்ற செயற்பாடாகும். இதனை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, உபவேந்தர் பதவியிலிருந்து பேரியர் நாஜிமை நீக்கி விட்டு, தற்காலிக உபவேந்தர் ஒருவரை நியமிப்பதென உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை தற்காலிய உபவேந்தராக பேராசியை உமா குமாரசாமி பதவியேற்பார் எனவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் தெரிவு விரைவில் நடைபெறும் என்றும், அதுவரையில் மாத்திரமே தற்காலிக உபவேந்தராக உமா குமாரசாமி பதவி வகிப்பார் எனவும் தெரியவருகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் உமா குமாரசாமி இவ்வாறு சிறிது காலம் தற்காலிக உபவேந்தராகப் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்