பிரதமராகுமாறு என்னை வலியுறுத்துகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

🕔 June 15, 2018

“என்னை பிரதமராகுமாறு நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மட்டுமன்றி, கூட்டு எதிரணியிலுள்ளஅனைவரும் வலியுறுத்துகின்றனர்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நாடாளுமன்றில் அதிகார மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் பிரதமர் ஆவது குறித்து தீர்மானிக்க முடியும். நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மட்டுமன்றி, கூட்டு எதிரணியிலுள்ள அனைவரும் என்னை பிரதமராகுமாறு வலியுறுத்துகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தில் உள்ளது என்பதை அவதானித்து வருகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்முடன் இணைய முடியாது. வருட இறுதிக்குள் அவர் இது தொடர்பான தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து நாங்கள் இன்னும் கருத்திற் கொள்ளவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்