ரணிலின் அண்ணன் மகள், மங்களவின் பிரத்தியேக செயலாளர் ஆகிறார்

🕔 June 10, 2018

ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க, தனது பிரத்தியேக செயலாளராக ஜுலை 01ஆம் திகதியிலிருந்து கடமையாற்றவுள்ளதாக, ஊடக மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ரி.என்.எல். தொலைக்காட்சி நிறுவனத்தின் பொல்கஹவெல பிரதேசத்திலுள்ள ஒலிபரப்பு கோபுரம் தடைசெய்யப்பட்டமை தொடர்பில்,  நேற்று முன்தினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து அமைச்சர் மங்கள விளக்கமளித்தார்.

இதன்போதே, மேற்படி தகவலையும் அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த ஒலிபரப்பு கோபுரம் தடைசெய்யப்பட்டமை தொடர்பில் – தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் சுதந்திரமானதும் பொறுப்புமிக்கதுமான ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் உறுதிசெய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

எல்லா ஊடகங்களும் எங்களுக்கு எதிராகவே வேலை செய்கின்றன. எதிர்க்கட்சியினருக்கு பெறுமதியான ஒளிபரப்பு நேரத்தை ஊடகங்கள் வழங்குகின்றன. தெரண மற்றும் ஹிரு ஆகிய சேவைகள் எதிரணியினருக்கு அதிக ஒளிபரப்பு நேரத்தை கொடுக்கின்றன.

ஆனாலும், அனைத்து ஊடகங்களுடனும் நாங்கள் நல்லிணக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.

சிரச ஊடகம் கூட அரசாங்கத்தையும் பிரதமரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி வருகின்றது. ஆனால் அவர்களை நாங்கள் தடுக்கவில்லை. அவர்கள் என்னையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கியிருந்தனர். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நான் நியமிக்கப்பட்டதை அடுத்து, சிரச நிறுவனத்தின் தலைவர் கிளி மகாராஜா எனக்கு மலர்க்கொத்து அனுப்பி வைத்தார்.

ஜுலை 01ஆம் திகதி முதல், இசினி விக்ரமசிங்க எனது பிரத்தியேக செயலாளராக செயற்படுவார்” என்றார்.

இசினி விக்ரமசிங்க – பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூத்த சகோதரர் ஷாண் விக்ரமசிங்கவினுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்