அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

🕔 June 6, 2018

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது.

பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்;

“மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல பில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக காணமல் போயுள்ளார். தேசிய அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் மந்தகரமாகவே  செயற்பட்டு வருகின்றது. அர்ஜுன மகேந்திரனை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

மோசடி  செய்யப்பட்ட நிதியினை மீள பெறுவது தொடர்பில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை காலமும் செயற்படவில்லை. குறித்த மோசடியின் காரணமாக அனைத்து துறைகளும் தற்போது பாதிக்கப்பட்ட நிலையிலே உள்ளது. அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு  அறிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரை காலமும் அதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் நோக்கம் தேசிய அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது. ஒருவேளை அவர் நாட்டுக்கு வந்தால் அது பிரதமருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே இவர்கள் அவரை பாதுகாக்கின்றனர்.

ஆகவே இவரை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்து கண்டுபிடித்து தருமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றார்

Comments