அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

🕔 August 26, 2015

Mahinda - 0123
ரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றமை நினைவுகொள்ளத்தக்கது. இதன்போதே, மேற்கண்ட விடயங்களை, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயினும், தனது சகோதரிகளின் ஆலோசனைப்படி அரசியலிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றமையானது போலியான காரணமாகும் என்றும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் ஜனாதிபதி மைத்திரியிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே, அரசியலிலிருந்து ஒதுங்கும் முடிவை – மஹிந்த எடுத்துள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகத்துக்கு சம்பிக்க ரணவக்கவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர், பொதுத் தேர்தலின் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவினதும், அவரின் குடும்பத்தாரினதும் பல்வேறு பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளைத் துவங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவை – பெருமளவான நிதி மோசடிகளை விசாரணை செய்யும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த திங்கட்கிழமை 05 மணித்தியாலங்கள் விசாரணை செய்திருந்தனர். அரச நிதியினை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அரச பாதுகாப்புப் பிரிவினரை மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியமை போன்ற குற்றச் சாட்டுகள் தொடர்பாகவே, கோட்டாபய ராஜபக்ஷ விசாரிக்கப்பட்டார்.

இவ்வாறாதொரு நிலையிலேயே, தனது சகோதரிகளின் ஆலோசனைப்படி அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரியிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்