ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

🕔 August 25, 2015

prageeth eknaligoda - 01
டகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ திருப்தி தெரிவித்துள்ளது.

அதேவேளை, இவ் விசாரணையின் ஒரு கட்டமாக – நேற்று திங்கட்கிழமை, ராணுவ வீரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையினை உற்சாகப்படுத்துவதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உறுதிமொழிக்கிணங்க, ஊடகவியலாளர் எக்னலிகொட தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, தீர்வொன்று காணப்படுமாயின், பிரகீத் தொடர்பில் – அவரின் குடும்பத்தார் மேற்கொண்டுவரும், நீண்டகாலத் தேடலுக்கு ஒரு நீதி கிடைக்கும் என்று, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் ஆசியப் பிராந்தியத்துக்கான நிகழ்சித் திட்ட இணைப்பாளர் பொப் டீற்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்கனலிகொட தொடர்பான விசாரணை மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மேலும் 09 ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பிலும், புதிய அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ கோரிக்கை விடுத்துள்ளது.

லங்கா ஈ நியுஸ் இணையத்தளத்தில், பத்தி எழுத்தாளராகவும் காட்டூன் வரைஞராகவும் பணியாற்றி வந்த பிரகீத் எக்னலிகொட, 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் காணாமல் போயிருந்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தார் மேற்கொண்டதாகக் கூற்படும் ஊழல், மோசடி தொடர்பில் பிரகீத் செய்தியொன்றினை வெளியிட்டிருந்த நிலையிலேயே, காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்